கைவினை பொருட்களை விற்க குறைந்த வாடகையில் கடைகள் ஒதுக்கப்படுமா?
வால்பாறை நகராட்சி மார்க்கெட்டில் கைவினை பொருட்களை விற்க குறைந்த வாடகையில் கடைகள் ஒதுக்கப்படுமா? என்று மலைவாழ் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வால்பாறை
வால்பாறை நகராட்சி மார்க்கெட்டில் கைவினை பொருட்களை விற்க குறைந்த வாடகையில் கடைகள் ஒதுக்கப்படுமா? என்று மலைவாழ் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கைவினை பொருட்கள்
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தில் 11 மலைவாழ் கிராமங்கள் உள்ளது. இந்த மலைவாழ் கிராம மக்களுக்கு வன உரிமை சட்டத்தின்படி விளைநிலங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இங்கு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், ஏலக்காய், கப்பைக்கிழங்கு, இஞ்சி போன்றவற்றை விளைவிக்கின்றனர்.
இது தவிர வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் இருந்து தேன், ஜாதிக்காய், ருத்திராட்சை, பட்டை, கிராம்பு போன்றவற்றையும் சேகரித்து விற்பனை செய்கின்றனர். மேலும் வனப்பகுதிக்கு இடையூறு ஏற்படுத்தும் களைச்செடிகளை பிடுங்கி, அதில் இருந்து பல்வேறு வகையான கைவினை பொருட்களை செய்கின்றனர்.
குறைந்த விலை
இவ்வாறு மலைவாழ் கிராம மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வால்பாறை பகுதிக்கு கொண்டு வந்து வியாபாரிகளிடமும் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். அதை அதிக விலைக்கு வியாபாரிகள் விற்பனை வருகின்றனர். வனப்பகுதிகளில் இருந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நகருக்கு கொண்டு வந்தும், உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல், மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நெடுங்குன்று மலைவாழ் கிராம மக்கள் கூறியதாவது:- வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் மலைவாழ் கிராம மக்கள் தங்களது பொருட்களை விற்பனை செய்வதற்காக 2 கடைகள் ஒதுக்கீடு செய்தனர். ஆனால் உரிய பராமரிப்பு இல்லாததால் அந்த கடைகளை பயன்படுத்த முடியாமல் போய் விட்டது.
அங்கீகாரம் கிடைக்கும்
எனவே வால்பாறை நகராட்சி மார்க்கெட் பகுதியில் காலியாக உள்ள கடைகளை குறைந்த வாடகைக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் எங்களது விவசாய விளைபொருட்கள் மற்றும் கைவினை பொருட்களை உரிய விலைக்கு விற்று லாபம் பெற முடியும். மேலும் விளைநிலங்களை பராமரித்துது கொள்ளவும், குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தி கொள்ளவும் உதவும். குறிப்பாக எங்களது கைவினை பொருட்கள் வெளிஉலகிற்கு தெரியவரும். இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அதை வாங்க ஆர்வம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.