சிவகாசி, திருத்தங்கல் ரெயில்வே மேம்பால பணிகள் விரைந்து தொடங்கப்படுமா?


சிவகாசி, திருத்தங்கல் ரெயில்வே மேம்பால பணிகள் விரைந்து தொடங்கப்படுமா?
x

சிவகாசி, திருத்தங்கல் ரெயில்வே மேம்பால பணிகள் விரைந்து தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழில்நகரமான சிவகாசியில் தீப்பெட்டி, பட்டாசு, அச்சு உள்ளிட்ட தொழில்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சரக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களும் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் சிவகாசிக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து சிவகாசிக்கு வந்து செல்கிறது. இப்படி முக்கியத்துவம் கொண்ட தொழில்நகரமான சிவகாசியில் போதிய சாலை வசதி இல்லாமல் இருக்கிறது. சாலைகளை அகலப்படுத்த தேவயைான நடவடிக்கையை நெடுஞ்சாலைத்துறையினர் செய்ய வேண்டும். அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட சாட்சியாபுரம், திருத்தங்கல் ரெயில்வே மேம்பால பணி இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இதனால் இந்த பகுதியை ரெயில்கள் கடந்து செல்லும் போது கேட் அடைக்கப்படுவதால் இப்பகுதியை கடந்து செல்ல வரும் வாகனங்கள் நீண்ட நேரம் இங்கு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த 2 ரெயில்வே கேட் பகுதியிலும் அவசர வழிகள் கூட இல்லை. இதனால் மருத்துவமனைக்கு செல்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் பகுதியில் உடனடியாக ரெயில்வே மேம்பாலம் அமைக்க தேவையான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story