மோகனூர் வாய்க்கால் கரையில் தார்சாலை அமைக்கப்படுமா?
மோகனூர் வாய்க்காலின் தடுப்புசுவர் உயரத்தை அதிகப்படுத்தி, தார்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மோகனூர்
மோகனூர் வாய்க்கால்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மோகனூர் வாய்க்கால் பாசனம் வாயிலாக ஏராளமான ஏக்கர் நிலம் பாசனவசதி பெற்று வருகிறது. விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை, கோரை போன்ற பல்வேறு வகையான பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
இந்த மோகனூர் வாய்க்கால் ஜேடர்பாளையம் காவிரி ஆற்று தடுப்பணையிலிருந்து ராஜாவாய்க்காலாக வந்து கூடுதுறை என்ற இடத்தில் இருந்து, மோகனூர் வாய்க்காலாக பிரிந்து சுமார் 22 கி.மீட்டர் தூரம் வரை செல்கிறது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த வாய்க்கால் நாமக்கல் மாவட்ட எல்லையான ஒருவந்தூர் ஊராட்சி வடுகபட்டி வரை சென்று முடிவடைகிறது. இந்த வாய்க்கால் கரை ஓரங்களில் அதிக அளவில் புற்கள், சீமைகருவேல முள் செடிகள், கொடிகள் என வளர்ந்து வாய்க்கால் கரையை மறைக்கும் அளவிற்கு நிறைந்து காணப்படுகின்றன. இவை நடந்து செல்லும் விவசாயிகள் மீது மோதுகின்றது.
தார்சாலை
மழைக்காலங்களில் வாய்க்கால் கரைகளில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் விவசாய நிலங்களில் இருந்து விலை பொருட்களை எடுத்துச் செல்வதில் விவசாயிகளுக்கு பெருத்த சிரமம் ஏற்படுகிறது. விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மோகனூர் வாய்க்கால் கரைகளில் தார்சாலை அமைத்தும், இருகரைகளிலும் தடுப்புச்சுவரை உயரப்படுத்தியும் சாக்கடை கால்வாய் மூலம் சேறு, சகதிகளை அப்புறப்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கழிவுநீர் கலப்பு
இது குறித்து மோகனூரை சேர்ந்த விவசாயி வரதராஜன் கூறியதாவது:-
மோகனூர் வாய்க்காலில் மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் சாக்கடைகள், 4 இடங்களில் நேரடியாக கலப்பதால் தண்ணீர் மாசடைந்து, விவசாயிகள் விவசாயம் செய்ய தயங்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக வாய்க்கால் பகுதியை சுத்தம் செய்வதற்கு எந்த கூலி தொழிலாளியும் வருவதில்லை.
வாய்க்காலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டால் கால், கைகளில் அரிப்பு ஏற்படுவதாகவும் அதிக அளவில் சேறு இருப்பதால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், சுகாதாரம் இல்லாததால் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும் கூறி வர மறுக்கின்றனர். மேலும் மோகனூர் வாய்க்கால் கரைகளில் தார்சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.
தடுப்புச்சுவரை உயர்த்த வேண்டும்
மோகனூர் வாய்க்கால் பாசனதாரர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன்:-
மோகனூர் வாய்க்காலில் இரு புறங்களிலும் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. அது போதிய உயரம் இல்லாததால் மண் சரிந்து வாய்க்கால் உள்பகுதியில் அதிகளவில் விழுந்து விடுகின்றன. இதனால் தண்ணீர் தேங்கி கடைமடை வரை தண்ணீர் செல்வது பாதிக்கப்படுகிறது. எனவே மீண்டும் சர்வே செய்து மண் உயரம் உள்ள அளவுக்கு இரு புறங்களிலும் தடுப்புச்சுவரை உயர்த்தி அமைக்க வேண்டும்.
மோகனூர் வாய்க்கால் பாசனதாரர் சங்க செயலாளர் அருணகிரி:-
மோகனூர் வாய்க்காலில் தூர்வாரும்போது அதில் உள்ள சேறு, சகதிகளை அள்ளி கரையில் உள்ள பாதையில் போடுவதால், பாதை உயரமாவதுடன் விவசாயிகள் அந்த பாதையில் செல்ல முடியாத நிலை உள்ளது. அத்துடன் வாகனங்கள் சறுக்கி கீழே விழுந்து விடும் அபாயமும் உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் தூர்வாரப்படும் சேறு, சகதிகளை வெளிப்பகுதியில் கொட்ட வேண்டும். மேலும் பாசன வாய்க்காலின் கரையில் தார்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
ஆகாயதாமரை
கணபதி பாளையம் விவசாயி முருகேசன்:-
மோகனூர் வாய்க்காலில் அடிக்கடி அதிக அளவில் ஆகாயதாமரை வளர்ந்து தேங்குவதால், கடைமடை வரை தண்ணீர் செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆகாய தாமரையை சுத்தப்படுத்த வேண்டும். அவ்வாறு சுத்தப்படுத்தினால் தான் கடைமடை வரை தண்ணீர் செல்லும்.
மேலும் கரையோரம் உள்ள தென்னை மரங்களில் இருந்து விழும் தென்னை மட்டைகளாலும் தண்ணீர் தேங்குகிறது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணி துறையினர் தண்ணீர் தேக்கமின்றி கடைமடை வரை செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.