படகு இல்லத்தை சூழ்ந்த ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா?


படகு இல்லத்தை சூழ்ந்த ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா?
x

கோவை உக்கடம் பெரியகுளத்தில் விரைவில் படகு சவாரி தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள படகு இல்லத்தை ஆகாய தாமரைகள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கோயம்புத்தூர்


கோவை உக்கடம் பெரியகுளத்தில் விரைவில் படகு சவாரி தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள படகு இல்லத்தை ஆகாய தாமரைகள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

படகு சவாரி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பெரிய குளம், முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.900 கோடி நிதி ஒதுக்கப்பட்டு குளக்கரைகளில் பூங்கா அமைத்தல், சிறுவர்களுக்கான விளையாட்டு உபரணங்கள், இருக்கைகள், அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் முதற்கட்டமாக உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் மாநகராட்சி ஆகியவை சார்பில் படகு சவாரி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான படகுகள் வாங்கப்பட்டு அந்தந்த குளங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கடந்த 2 வாரங்களுக்கு முன் படகுகள் வெள்ளோட்டம் விடப்பட்டன. இந்த நிலையில் உக்கடம் குளத்தில் உள்ள படகு இல்லத்தை சுற்றிலும் ஆகாய தாமரைகள் வளர்ந்து ஆக்கிரமித்து காணப்படுகிறது.

படகுகள் வீணாகும் அபாயம்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

உக்கடம் பெரிய குளத்தில் கழிவு நீர் கலப்பதால் ஆகாய தாமரை அதிவேகமாக வளர்க்கின்றன. மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட மாத இடைவெளியில் எந்திரங்களை பயன்படுத்தி இந்த ஆகாய தாமரைகள் அகற்றப்படுகின்றன. இதற்காக பல லட்ச ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் ஆகாய தாமரை அகற்றப்பட்ட சில வாரங்களில் மீண்டும் வளர்ந்து குளத்தை மூடி விடுகிறது. தற்போது உக்கடம் பெரிய குளத்தில் படகு சவாரி தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள படகு இல்லத்தை ஆக்கிரமித்து ஆகாய தாமரைகள் வளர்ந்து உள்ளன.

இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பல லட்ச ரூபாய் மதிப்பிலான படகுகள் வீணாகும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்களும் இந்த படகு இல்லத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே உக்கடம் குளத்தில் நிலவும் ஆகாய தாமரை பிரச்சினைக்கு மாநகராட்சி அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story