அணுகுசாலை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?


அணுகுசாலை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
x

விழுப்புரம்- திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் அணுகுசாலை அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? என்று பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2008-ம் ஆண்டில் 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் விழுப்புரம் புறவழிச்சாலையில் திருக்கோவிலூர் நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் ரெயில்வே மற்றும் சாலை மேம்பாலம் கட்டப்பட்டு புறவழிச்சாலை நேர்படுத்தப்பட்டது.

இதனால் திருக்கோவிலூரில் இருந்து வரும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்னை மார்க்கத்தில் செல்வதற்கு வழியில்லாமல் போனது. இதன் காரணமாக திருக்கோவிலூர் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பிற்கு வந்து பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம், எல்லீஸ்சத்திரம் சாலை வழியாக சுற்றிக்கொண்டு புறவழிச்சாலையை கடந்து சென்னை, திருச்சி மார்க்கம் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

அணுகுசாலை

நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டபோதே இப்பிரச்சினையை உணர்ந்த திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த பலர், புறவழிச்சாலையில் திருக்கோவிலூர் சாலையோடு இணைக்கும் வகையில் அணுகு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசிடமிருந்து ஒப்புதலும் வந்தது. இங்கு 90 அடி அகலத்தில் ரூ.5½ கோடி மதிப்பில் சாலை பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதற்காக சாலை அமைக்கும் பணிக்காக அளவீடு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் செல்லும் விழுப்புரத்தான் வாய்க்காலை கடந்து செல்ல ஏதுவாக பாலம் அமைப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் அப்படியே கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

ஆமை வேகத்தில்

இங்குள்ள புறவழிச்சாலையில் அணுகுசாலை பணிகளை மேற்கொள்வது குறித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இப்பகுதியில் அணுகுசாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கி முடிக்கப்படும் என்றார். ஆனால் ஓராண்டாகியும் இன்னும் பணிகள் முடிக்கப்படவில்லை. இப்பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இதனால் திருக்கோவிலூர் மார்க்கத்தில் இருந்து சென்னை, திருச்சி செல்பவர்கள், மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் விழுப்புரம் நகரத்திற்குள் வந்துதான் செல்கின்றனர். அதேபோல் புதுச்சேரி மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் விழுப்புரம் நகரத்திற்குள் வந்துதான் செல்கின்றனர். இதனால் அவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதோடு அவர்களுக்கு நேர விரயமும் ஏற்படுகிறது.

விரைவில் முடிக்கப்படுமா?

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு விழுப்புரம் புறவழிச்சாலையில் திருக்கோவிலூர் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் செல்ல வசதியாக அணுகுசாலை பணியை விரைவில் தொடங்கி முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story