ஆவுடையார்கோவில் பகுதியில் நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?


ஆவுடையார்கோவில் பகுதியில் நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?
x

ஆவுடையார்கோவில் பகுதியில் நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா? என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

புதுக்கோட்டை

இரவு நேர பஸ்கள் நிறுத்தம்

ஆவுடையார்கோவில் தாலுகாவில் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவிலுக்கு இரவு 9 மணிக்கு மேல் செல்வதற்கு பஸ்கள் எதுவும் இல்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வெளி ஊர்களுக்கு வேலைக்கு சென்று திரும்புபவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

முன்பு அறந்தாங்கியில் இருந்து தனியார் பஸ் இரவு 9.15-க்கு கோட்டைப்பட்டினத்திற்கும், 9.30 மணிக்கு ஒக்கூர், கரூர் வழியாக திருப்புனவாசலுக்கும், 9.45-க்கு அமரடக்கி வழியாக மீமிசல் வரை சென்றது. 10 மணிக்கு பொன்பேத்தி வழியாக திருப்புனவாசலுக்கும், இரவு 10.30 மணிக்கு மீமிசல் வரையும் அரசு பஸ் இயக்கப்பட்டன. தற்போது அந்த பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

கோரிக்கை

பஸ்கள் இயக்கப்படாததால் அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவில் வருபவர்களுக்கும், அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவில் வழியாக அம்பலவாணன் ஏந்தல் வழியாக கோட்டைப்பட்டினத்திற்கு செல்பவர்களுக்கும், அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவில் ஒக்கூர், கரூர் வழியாக திருப்புனவாசலுக்கும் செல்பவர்களுக்கு சிரமமாக இருக்கிறது.

அதேபோல் அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவில் அமரடக்கி வழியாக மீமிசல் வரை சென்றுவந்த பஸ்சையும், அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவில் பொன்பேத்தி வழியாக திருப்புனவாசல் வரை சென்று வந்த பஸ்சையும், இரவு 10.30 மணிக்கு அறந்தாங்கியில் இருந்து மீமிசல் சென்ற பஸ்சையும் மற்ற அனைத்து பஸ்களையும் மீண்டும் இயக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

மீண்டும் இயக்க வேண்டும்

இடையூர் கிராமத்தை சேர்ந்த எஸ்.கே.சுப்பிரமணியன்:- ஆவுடையார்கோவிலில் இரவு 7 மணிக்கு ஒரு தனியார் பஸ் திருப்புனவாசல் வரை செல்கிறது. அதைவிட்டால் வேறு பஸ்கள் இயக்கப்படவில்லை. முன்பு இதே வழி தடத்தில் இரவு 10 மணிக்கு சென்ற தனியார் பஸ்சையும் மீண்டும் இயக்க வேண்டும்.

சிரமம்

ஆவுடையார்கோவில் அனைத்து வர்த்தக சங்க தலைவர் செபாஸ்டின்:- அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவிலுக்கு இரவு 9 மணிக்கு மேல் பஸ்கள் இல்லாததால் வெளியூர்களுக்கு சென்று வரும் பொதுமக்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் திருச்சியில் இருந்து ஆவுடையார்கோவில் வழியாக மீமிசல் வரை சென்று வந்த பஸ்கள் முன்பு காலை நேரத்தில் இயக்கப்பட்டது. தற்சமயம் அந்த பஸ்களும் இயக்கப்படாமல் உள்ளது. அந்த பஸ்களையும் இயக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கண்ணமங்களம் கிராமத்தை சேர்ந்த நமச்சிவாயம்:- அறந்தாங்கியில் இருந்து இரவு 9.30-க்கு ஆவுடையார்கோவில், ஒக்கூர், கரூர் வழியாக சென்றுகொண்டிருந்த ஒரு தனியார் பஸ் இயங்காமல் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். அந்த தனியார் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறந்தாங்கியில் இருந்து திருப்புனவாசலுக்குஒரு தனியார் பஸ் பகலில் சென்று வந்தது. அந்த பஸ்சும் தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். இதனால் அந்த பஸ்சையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ்களை இயக்க வேண்டும்

சுப்பிரமணியன்:- அறந்தாங்கியில் இருந்து பெருங்காடு, குன்னூர், இசைமங்களம் மற்றும் கிடங்கிவயல் வழியாக ஆவுடையார்கோவிலுக்கு ஏற்கனவே இயக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். பஸ் வராததால் வேலைக்கு செல்வோர், பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அரசு உடனடியாக மீண்டும் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story