முந்திரி பருப்பு தொழில் மேம்படுத்தப்படுமா?


முந்திரி அல்லது மரமுந்திரி என்பது அனகார்டியாசியே குடும்பத்தை சேர்ந்த ஒரு மரமாகும். முந்திரிக்கொட்டைகள் வறுக்கப்பட்டு உண்ணப்படுவதுடன், கறி சமைக்கவும், ருசியைச் சேர்ப்பதற்காக வேறு உணவுகளுடன் சேர்க்கப்பட்டும் பயன்படுத்தப்படுகின்றது.

புதுக்கோட்டை

முந்திரி சாகுபடி

தமிழகத்தில் பண்ருட்டிக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கந்தர்வகோட்டை, திருவரங்குளம், கறம்பக்குடி, குன்றான்டார்கோவில், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மானாவாரி முறையிலும், சொட்டுநீர் முறையிலும் முந்திரி சாகுபடி செய்து வருகின்றனர்.

முந்திரி பருப்புக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பதப்படுத்தப்பட்ட முந்திரி பருப்பில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவை இந்தியாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தநிலையில் ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை பகுதியில் சாலையோரம் குடிசைகளில் முந்திரி பருப்பு விற்பனை செய்யப்படுவதை காணமுடியும். காலம், காலமாக இவர்கள் இந்த குடிசையில் தான் முந்திரி பருப்பினை உடைத்து, வியாபாரம் செய்து வருகின்றனர். இத்தொழிலை மேம்படுத்த வேண்டும் என்பது தான் இவர்களது கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது:-

முனிக்கருகல் நோயால் மகசூல் பாதிப்பு

ஆதனக்கோட்டை அருகே உள்ள கருப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜகோபால்:- ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள் மட்டுமே முந்திரி காய்க்கும் தருணம் உள்ள காலமாகும். முந்திரியில் தேயிலை கொசுக்கள் பாதிப்பினால் முனிக்கருகல் நோய் தாக்கி மகசூல் வெகுவாக குறைகிறது. மானாவாரி சாகுபடி முறையில் ஆண்டுக்கு அதிகபட்சம் ஏக்கருக்கு 2 மூட்டை கூட முந்திரிக்கொட்டை விளைச்சல் கிடைப்பது அரிதாக உள்ளது. ஒரு மூட்டை முந்திரிக்கொட்டை ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை மட்டுமே போவதால் உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தையே சந்திக்க வேண்டியுள்ளது. ஆதனக்கோட்டை சுற்றுவட்டார விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக முந்திரி தொழிற்சாலை இப்பகுதியில் ஏற்படுத்தினால் நாங்கள் விளைவித்த முந்திரிக்கொட்டைக்கு உரிய விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

மானிய விலையில் உலர் எந்திரம்

முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள அழகுராஜ்:- ஆதனக்கோட்டையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முந்திரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். மழைக்காலங்களில் முந்திரி பருப்பின் தோல் உரிக்க முடியாததால் முந்திரி பருப்பை காயவைத்து தோல் உரிக்க ஏதுவாக உலர் எந்திரம் மானிய விலையில் வழங்க வேண்டும். நாங்கள் சாலையோரங்களில் கீற்றுக் கொட்டைகளை அமைத்து குடிசைகளில் தொழில் செய்து வருகிறோம். எனவே அரசின் சார்பில் எங்களது கடைகளுக்கு ஆஸ்பிட்டாஸ் சீட்டிலான கொட்டகை அமைத்து கொடுத்தால் ஏழ்மையில் இருக்கும் எங்களுக்கு தொழில் செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

வண்டுகள் தாக்குதல்

கணபதிபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி நடராஜன்:- முந்திரி செடி மற்றும் மரங்களில் வண்டுகள் அதிகமாக தாக்குவதால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் ஆண்டுதோறும் முந்திரி மரங்கள் பட்டுப்போய் வருகின்றன. இதனால் முந்திரி மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. முந்திரிக்கன்றுகள் நடவு செய்தாலும் போதிய மழையின்மை, வறட்சி மற்றும் வெள்ளாடுகளின் பெருக்கம் ஆகியவற்றால் பாதுகாக்க முடியாமல் முந்திரி செடிகளை வளர்ப்பது என்பது கடினமாக உள்ளது. முந்திரி சாகுபடிக்கு தேவையான அரசின் திட்டங்கள் ஒருசில அதிகாரிகளால் தோட்டக்கலையில் இருந்து விவசாயிகளுக்கு முறையாக வந்து சேர்வதில்லை. முந்திரி உற்பத்திக்கு தேவையான உரம், இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்கள் முறையாக விவசாயிகளுக்கு கிடைக்காமல் போவதாலும் முந்திரி சாகுபடியில் சரியான ஆலோசனை இல்லாமல் பெரிய நஷ்டத்தை சந்திப்பதால் முந்திரி சாகுபடி செய்வதில் விரக்தியில் உள்ளோம். எனவே அரசிடமிருந்து முந்திரி சாகுபடிக்கு தேவையான மானியங்கள், அரசின் திட்டங்கள் சரிவர கிடைத்தால் மட்டுமே எங்களால் முந்திரி சாகுபடி விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபட முடியும்.

கந்துவட்டி

முந்திரி பருப்பு உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள சித்ரா:- ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் முந்திரி விவசாயிகளிடமிருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.9 ஆயிரம் கொடுத்து வாங்கி வருகிறோம். முந்திரி மூட்டைகளை வாங்குவதற்கு போதியளவு பணம் இல்லாததால் கந்து வட்டிக்கு வாங்கி முந்திரிக்கொட்டை மூட்டைகளை வாங்கி இருப்பு வைக்க வேண்டியுள்ளது. இதனால் எங்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச லாபமும் வட்டிக்காக செலவிட வேண்டி உள்ளது. இதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம் குறைந்து விடுகிறது. ஆகையால் முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தேவையான நிதியுதவி குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகள் கடனுதவி வழங்குவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். நாங்கள் தயாரிக்கும் முந்திரிக்கொட்டை வறுத்து, உடைத்து ஆயில் நீக்கிய பருப்பு என்பதால் நல்ல சுவை இருக்கும். ஆகையால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆதனக்கோட்டை வழியாக வரும் போது வறுத்த முந்திரி பருப்பினை விரும்பி சாப்பிட்டு வாங்கிச் செல்கின்றனர். எங்கள் கடைகளில் விற்பனை செய்தது போக மீதமுள்ள முந்திரிபருப்புகளை கந்தர்வகோட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மளிகை கடைகளில் மொத்த விலைக்கு விற்பனைக்கு கொடுப்பதால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம் குறைந்து விடுகிறது. 80 கிலோ முந்திரிக்கொட்டை மூட்டைக்கு 18 முதல் 19 கிலோ பருப்பு கிடைக்கிறது. ஒரு கிலோ ரூ.800 விதம் விற்பனை செய்கிறோம். இதனால் எங்களுக்கு போதிய அளவு லாபம் கிடைப்பதில்லை. முந்திரிக்கொட்டை வறுத்து, உடைத்து, தோல் நீக்க கூலி தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை செலவாகிறது. எனவே முந்திரிப் பருப்புக்கு தேவையான உரிய விலை கிடைக்க எங்களுடைய முந்திரிப்பருப்பினை அரசே கொள்முதல் செய்து அரசின் கூட்டுறவு அங்கன்வாடிகளிலும் விற்பனை செய்ய வேண்டும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு எங்களுக்கு லைசன்ஸ் வாங்கி கொடுத்து அனைத்து உதவிகளையும் செய்ய முன்வர வேண்டும். மேலும், முந்திரிக்கொட்டை மூட்டைகளை சேமித்து வைக்க தேவையான சேமிப்பு கிடங்கு கட்டிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆதனக்கோட்டையில் முந்திரி தொழிற்சாலை அமைக்க திட்டம்

முந்திரி தொழில் தொடர்பாகவும், அவர்களது கோரிக்கைகள் தொடர்பாகவும் வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஆதனக்கோட்டை பகுதியில் அரசு சார்பில் முந்திரி தொழிற்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் வந்ததின் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்ததும் இத்தொழிற்சாலை அமைக்கப்படும். இதன் மூலம் விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும் முந்திரிபருப்பு கொள்முதல் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கு வழிவகுக்கும். முந்திரி பருப்பு தொழிலில் ஈடுபடுவர்களுக்கு கடனுதவி வழங்க திட்டம் உள்ளது. பாரத பிரதமரின் சிறு நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம் மூலம் 35 சதவீதம் வரை மானியம் கொடுக்கப்படுகிறது. மேலும் வங்கிகளில் கடனுதவி பெற ஏற்பாடு செய்யப்படும். இது தொடர்பாக முந்திரி தொழிலில் ஈடுபடும் வியாபாரிகளிடம் ஏற்கனவே எடுத்துரைத்துள்ளோம். ஆனால் அவர்கள் யாரும் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இத்திட்டத்தில் முந்திரி இல்லாமல் கடலை வறுத்து தொழில் செய்பவர்கள், முறுக்கு தொழில் செய்பவர்கள் உள்பட சிறு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இத்திட்டத்தில் ஏற்கனவே வங்கிகளில் கடன் வாங்கி கொடுத்துள்ளோம்'' என்றார்.


Next Story