காவிாி கரையில் கட்டப்பட்ட கான்கிரீட் தளம் தரம் உயர்த்தப்படுமா?


காவிாி கரையில் கட்டப்பட்ட கான்கிரீட் தளம் தரம் உயர்த்தப்படுமா?
x

குளித்தலை கடம்பந்துறை காவிாி கரையில் கட்டப்பட்ட கான்கிரீட் தளம் தரம் உயர்த்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

காவிாி ஆறு

கரூா் மாவட்டம், குளித்தலையில் உள்ள கடம்பவனேசுவரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலின் எதிரே உள்ள கடம்பந்துறை காவிரி ஆற்று பகுதிக்கு இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குளிக்க செல்வது வழக்கம். அதுபோல பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடம்பந்துறை காவிரி ஆற்று பகுதியில் நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த காவிரி ஆற்று பகுதியில் தைப்பூசத்தன்று 8 ஊர்களை சேர்ந்த சுவாமிகள் ஒன்று கூடி தீர்த்தவாரி நடப்பது பிரசித்தி பெற்ற திருவிழாவாகும்.குளித்தலை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழா காலங்களில் பக்தர்கள் இங்கு வந்து புனித நீராடி தீர்த்த குடம், பால்குடம் எடுத்துச் செல்வதும் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களிலும் தை, ஆடி, புரட்டாசி போன்ற மாதங்களில் வரும் முக்கிய அமாவாசை நாட்களிலும் பலர் இங்கு வந்து நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருவது வழக்கம்.

படிக்கட்டுகள் ேசதம்

இதுபோன்று பல வகையில் பிரசித்தி பெற்றது இந்த கடம்பந்துறை. இங்கு காவிரி ஆற்று பகுதியில் பொதுமக்களின் நலன் கருதியும், ஆற்றில் வெள்ளம் வரும்போது கரையை பாதுகாக்கும் வகையிலும் பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறை சார்பில் கான்கிரீட் சுவர் மற்றும் கான்கிரீடாலான தடுப்பு சுவர், 3 இடங்களில் படிக்கட்டுகளும் மற்றும் ஒரு இடத்தில் கால்நடைகள் ஆற்றுக்குள் இறங்கிச்செல்லும் வகையில் ரேம்ப் அமைக்கப்பட்டது.

காவிரி ஆற்றில் அதிக அளவிலான தண்ணீர் வந்த காலங்களில் இங்கு அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் மற்றும் படிக்கட்டுகள் சேதமடைந்தன. இந்த சேதமடைந்த படிக்கட்டுகள் தடுப்பு சுவர்கள் ஆகியவற்றை மீண்டும் பராமரிக்க எந்த முயற்சியும் சம்பந்தப்பட்ட துறையால் மேற்கொள்ளப்படவில்லை. இந்தநிலையில் அமாவாசையான நேற்று குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றுப்பகுதிக்கு பலர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்திருந்தனர். அவர்களில் சிலர் தங்களது மோட்டார் சைக்கிள்களை இங்குள்ள படிக்கட்டுகளின் அருகில் இருந்த கான்கிரீட் தளத்தின் மேல் நிறுத்திவிட்டு ஆற்றுக்கு சென்றுள்ளனர்.

உறுதித்தன்மை இல்லை

அப்பொழுது அந்த கான்கிரீட் பகுதி உடைந்து பள்ளமானது. இதனால் அதன் மேல் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் பள்ளத்தில் விழுந்து சேதமானது. இதைபார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் பள்ளத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள்களை வெளியே எடுத்து உதவினர். காவிரி ஆற்றில் வரும் வெள்ளநீர் கரையை அரிக்காமல் தடுப்பதற்காகவும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதற்காகவும் கடம்பந்துறை காவிரி ஆற்று பகுதியில் கட்டப்பட்ட கான்கிரீட் தடுப்பு சுவர் மற்றும் படிக்கட்டுகள் உறுதித்தன்மை இல்லாமலும் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால்தான் இந்த தடுப்பு சுவர்கள் சேதம் அடைந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

குற்றச்சாட்டு

இந்த கட்டுமான பணிகள் நடைபெறும்போது வெள்ளநீரை தாங்கும் வகையில் தடுப்பு சுவரின் அடிப்பகுதி உறுதி தன்மையுடன் கட்டப்படுகிறதா? என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பார்வையிட்டு ஆய்வு செய்யாமல் ஒப்புதல் அளித்த காரணத்தினாலேயே இது போன்ற தரமற்ற கட்டுமான பணிகள் நடைபெறுவதாக பலதரப்பட்ட மக்கள் தங்களது குற்றச்சாட்டாக முன்வைக்கின்றனர்.எனவே இனிவரும் காலங்களில் சேதமடைந்துள்ள இந்த தடுப்பு சுவர் மற்றும் படிக்கட்டுகளை சீரமைக்கும் பணி நடைபெறும் போது அவை உறுதி தன்மையுடன் இருக்கும் வகையில் சீரமைப்பதற்கான நடவடிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story