குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்யுமா மாநகராட்சி...


குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்யுமா மாநகராட்சி...
x
தினத்தந்தி 27 Jun 2023 4:30 AM IST (Updated: 27 Jun 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை கண்ணாமூச்சி காட்டுவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ½ அடியாக குறைந்துள்ளது. எனவே குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை

நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை கண்ணாமூச்சி காட்டுவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ½ அடியாக குறைந்துள்ளது. எனவே குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறுவாணி அணை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மன்னார்க்காடு அருகே அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கோவை மாநகருக்கு குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 45 அடிக்கும் மேல் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு அனுமதிப்பது இல்லை.

இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய அளவுக்கு மழை பெய்யவில்லை. அத்துடன் அணையில் இருந்து குடிநீருக்காக அதிகளவில் தண்ணீர் எடுத்ததாலும், அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது.

½ அடியாக நீடிப்பு

இதற்கிடையே, கடந்த வாரத்தில் அணையின் நீர்மட்டம் ஒரு அடிக்கும் கீழ் சென்றது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் ½ அடியாக இருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 3 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. அதில் 2 கோடியே 75 லட்சம் லிட்டர் தண்ணீர் கோவை மாநகர பகுதிக்கு கொடுக்கப்பட்டது.

தற்போது அணையில் அரை அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை எப்போது பெய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை

சிறுவாணி அணைப்பகுதியில் இந்த காலக்கட்டத்தில் பலத்த மழை பெய்யும். ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாமல் கண்ணாமூச்சி காட்டுவதுடன், லேசாக சாரல் மழை மட்டுமே பெய்கிறது. நேற்று அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் 5 மி.மீ. மழை மட்டுமே பதிவாகி இருக்கிறது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயராமல் கடந்த ஒருவாரமாக அரை அடியிலேயே நீடித்து வருகிறது. வழக்கமாக ஆகஸ்டு, அல்லது செப்டம்பர் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பும். எனவே அடுத்த மாதம் முதல்வாரத்தில் பருவமழை அதிகமாக பெய்யும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மாற்று ஏற்பாடு

இதுகுறித்து கோவை மாநகர பகுதி பொதுமக்கள் கூறும்போது, தற்போது பல இடங்களில் 20 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சிறுவாணி அணையில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் மாதத்துக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்வார்கள். எனவே அதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.


Next Story