தியாகதுருகம் அருகே குண்டும், குழியுமான தார்ச்சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பாா்ப்பு


தியாகதுருகம் அருகே குண்டும், குழியுமான தார்ச்சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பாா்ப்பு
x
தினத்தந்தி 2 Oct 2023 6:45 PM GMT (Updated: 2 Oct 2023 6:46 PM GMT)

தியாகதுருகம் அருகே குண்டும், குழியுமான தார்ச்சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே புதுஉச்சிமேடு ஊராட்சிக்கு உட்பட்ட பழைய உச்சிமேடு கிராமம் உள்ளது. இந்த கிராமம் கள்ளக்குறிச்சியில் இருந்து கூத்தக்குடி செல்லும் சாலையில் புது உச்சிமேடு பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் வசதிக்காக இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியூர் செல்வதற்கும், மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதற்கும், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கும், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதற்கும் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் புது உச்சிமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கும் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

குண்டும், குழியுமாக...

இந்த நிலையில் இச்சாலையை அதிகாரிகள் சரிவர பராமரிக்கவில்லை. இதனால் தற்போது இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சேதமடைந்துள்ள இந்த சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேளாண் இடு பொருட்கள் எடுத்துச் செல்லும் விவசாயிகள் மற்றும் முதியவர்கள், பாதசாரிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்தச் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே சிதறி கிடப்பதால் வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

கோரிக்கை

மேலும் மழை பெய்தால், பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், பள்ளம் தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை உடல்நிலை சரியில்லாத நேரங்களில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு ஆட்டோ, கார் போன்ற வாகனங்களின் டிரைவர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பழைய சாலைகளை முழுவதுமாக பெயர்த்தெடுத்து புதிதாக தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story