பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?


பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:17:23+05:30)

வால்பாறை அருகே வெள்ளமலை டனல் சுற்றுலா தலத்தில் பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறை அருகே வெள்ளமலை டனல் சுற்றுலா தலத்தில் பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

சுற்றுலா பயணிகள்

மலைப்பிரதேசமான வால்பாறை பகுதியில் 9-வது கொண்டை ஊசி வளைவு காட்சி முனை, ஹார்ன்பில் காட்சி முனை, கூழாங்கல் ஆறு, நீரார் அணை, சோலையாறு அணை, நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை, வெள்ளமலை டனல் காட்சி பகுதி ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு இயற்கை சூழல், பசுமையான தேயிலை தோட்டங்கள், பகலில் வெயில் மாலையில் குளிர், பனிமூட்டம் போன்றவற்றை கண்டு அனுபவித்து செல்வதற்காக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

வால்பாறை பகுதிக்கு நவம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இருப்பினும், சுற்றுலா தலங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட சுற்றுலாத்துறையினர், பொதுப்பணித்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அனுமதிக்க வேண்டும்

வால்பாறை பகுதியில் உள்ள கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை, வெள்ளமலை டனல் ஆகிய சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதற்கிடையே வெள்ளமலை டனல் பகுதியில் உள்ள பாலம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் டனல் பகுதிக்கு செல்லும் வழியை பொதுப்பணித்துறையினர் அடைத்து வைத்து உள்ளனர். இருப்பினும், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் தடுப்புகளை தாண்டி சென்று சிறிய நீர்வீழ்ச்சியில் குளித்து வருகின்றனர். பழுதடைந்த பாலத்தை சீரமைப்பு பணி மேற்கொண்டு, சுற்றுலா பயணிகளுக்கு திறந்து விடப்படாமல் உள்ளது. இதனால் சுற்றுலா வருபவர்கள் அத்துமீறி செல்வதால் தவறி விழுந்து விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வெள்ளமலை டனல் பகுதியில் பாலம் பராமரிப்பு பணியை முடித்து, சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் வால்பாறையில் சுற்றுலா அலுவலகம் அமைத்து, அனைத்து துறையினருடன் ஆலோசனை நடத்தி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story