ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அகற்றப்படுமா?


ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாமாகுடி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா? என அப்பகுதி கிராமமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

மாமாகுடி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா? என அப்பகுதி கிராமமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி

மயிலாடுதுறை மாவட்டம் மாமாகுடி ஊராட்சி காளியம்மன் கோவில் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் மாமாகுடி, சிவன் கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, அக்ரகாரம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்த தொட்டியின் அடிப்பகுதி மற்றும் தூண்களில் உள்ள சிமெண்டு காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருகிறது. சில இடங்களில் விரிசல்கள் காணப்படுகின்றன.

கோரிக்கை

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே கிராம நிர்வாக அலுவலகம், மற்றும் நூலகம் உள்ளது. இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நீர்த்தேக்க தொட்டி திடீரென இடிந்து விழுந்து விடும் ஆபத்தும் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். எனவே அசம்பாவிதங்கள் எதுவும் நடப்பதற்கு முன்னர் சேதம் அடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் அல்லது அதனை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story