பாழடைந்து கிடக்கும் கூட்டுறவு சங்க கிடங்கு கட்டிடம் அகற்றப்படுமா?


பாழடைந்து கிடக்கும் கூட்டுறவு சங்க கிடங்கு கட்டிடம் அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 18 Sep 2023 6:45 PM GMT (Updated: 18 Sep 2023 6:46 PM GMT)

திருவெண்காட்டில் பாழடைந்து கிடக்கும் கூட்டுறவு சங்க கிடங்கு கட்டிடம் அகற்றப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காட்டில் பாழடைந்து கிடக்கும் கூட்டுறவு சங்க கிடங்கு கட்டிடம் அகற்றப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கூட்டுறவு கிடங்கு

மயிலாடுதுறை மாவட்டம், மணி கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் திருவெண்காடு, மணிகிராமம் மற்றும் ராதா நல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். சம்பா மற்றும் குறுவை சாகுபடி காலங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை பாதுகாத்திட ஏதுவாக கடந்த 1962-ம் ஆண்டு திருவெண்காட்டில் கிடங்கு கட்டப்பட்டது.

இந்த கிடங்கு கட்டிடம் தற்போது முற்றிலும் சேதமடைந்து செடிகள் வளர்ந்து உள்ளது. மேலும் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்தும், சுவரில் விரிசல் ஏற்பட்டும் பாழடைந்த நிலையில் உள்ளது.

அகற்ற வேண்டும்

இந்த கட்டிடம் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் மேல கோபுர வாசல் அருகே கோவிலை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி பொதுமக்கள் வாகனங்கள் மூலம் இந்த சேதமடைந்த கட்டிடத்தின் வழியாக சென்று வருகின்றனர். இதுகுறித்து திருவெண்காடு முன்னாள் கவுன்சிலர் ராம நடராஜன் கூறுகையில் இந்த கட்டிடம் மேல சன்னதி பகுதியில், தார் சாலையை ஒட்டி மக்கள் அதிக அளவில் நடமாடும் இடத்தில் அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்ட இந்த கட்டிடம் தற்போது முற்றிலும் உபயோகமற்று, ஆங்காங்கே விரிசலுடன் காணப்படுகிறது. எனவே ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் இந்த கட்டிடத்தை அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


Next Story