பாழடைந்த உப்பரிகை மண்டபம் சீரமைக்கப்படுமா?


பாழடைந்த உப்பரிகை மண்டபம் சீரமைக்கப்படுமா?
x

பாழடைந்த உப்பரிகை மண்டபம் சீரமைக்கப்படுமா?

தஞ்சாவூர்

பாழடைந்த உப்பரிகை மண்டபத்தை சீரமைத்து, நினைவு சின்னமாக பாதுகாக்கப்படுமா? என வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உப்பரிகை மண்டபம்

தஞ்சை மானோஜிபட்டியில் கட்டப்பட்டுள்ள உப்பரிகை மண்டபம் நீலகிரி தோட்டத்துக்கு உட்பட்ட பகுதியாகும். நீலகிரி தோட்டம் அந்த காலத்தில் மரங்கள் நிறைந்த காட்டு பகுதியாக இருந்தது. கோடைகாலத்திலும் குளிர்ச்சியாக இருந்து வந்த இந்த பகுதிக்கு நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும் விலங்குகளை வேட்டையாட சென்றுள்ளனர்.

வேட்டைக்கு பிறகு தங்கி ஓய்வு எடுப்பதற்காக இந்த உப்பரிகை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. உப்பரிகை என்றால் மேல்மாடி, மேல்மாடம் என பொருள். சுட்ட செங்கற்கள், சுண்ணாம்பு காரையை பயன்படுத்தி நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தில் ஏறுவதற்குத் தென்பகுதியில் 18 கருங்கல் படிக்கட்டுகள் உள்ளன. இந்த மண்டபத்தில் மொத்தம் 12 ஜன்னல்கள் உள்ளன. உள்புறத்தில் பிரம்மாண்டமான வட்ட வடிவிலான ஒரு மண்டபமும் உள்ளது.

சிதிலமடைந்துள்ளது

அதை சுற்றி வர நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது எட்டு தூண்களை அமைத்து, மேல் தளம் கட்டப்பட்டுள்ளது. மண்டபத்தில் உள்புற மேல்தளத்தில் ராமரின் பட்டாபிஷேக காட்சிகள் அழகிய சுதை சிற்பமாக இடம் பெற்றுள்ளது. மேற்புறத்தில் தாமரை பூ மொட்டு வடிவில் கூம்பு வடிவ கோபுரம் உள்ளது.

இந்த உப்பரிகை மண்டபம் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. வரலாற்று சின்னமாக போற்றப்பட வேண்டிய பழங்கால உப்பரிகை மண்டபம் பாழடைந்த கட்டிடமாக காட்சி அளிப்பதால் இந்த உப்பரிகை மண்டபத்தை பழமை மாறாமல் சீரமைத்து நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும்.

வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறும்போது, இந்த கட்டிடம் நாயக்கர் கால, மராட்டிய கால பாணியில் கட்டப்பட்டுள்ளது. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மண்டபம் பிற்காலத்தில் மராட்டியர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சின்னமாக போற்றப்பட வேண்டிய இந்த உப்பரிகை மண்டபம் இப்போது சிறிது சிறிதாக சிதிலமடைந்து, பாழடைந்த மண்டபமாகக் காட்சி அளிக்கிறது. கட்டுமானமும் சிதைந்து வருவதால் பொலிவிழந்து வருகிறது. இதை சீரமைத்தால் சுற்றுலா தலமாக மாற வாய்ப்பு உள்ளது. தஞ்சையில் உள்ள பழம்பெருமைகளில் ஒன்றான இந்த மண்டபத்தைத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையோ அல்லது மத்திய அரசு தொல்லியல் துறையோ பழமை மாறாமல் சீரமைத்து நினைவுச் சின்னமாகப்போற்றி பாதுகாக்க வேண்டும் என்றனர்.


Next Story