இருவழிச்சாலை பணிகள் விரைவில் முடிக்கப்படுமா?


இருவழிச்சாலை பணிகள் விரைவில் முடிக்கப்படுமா?
x
தினத்தந்தி 3 Oct 2023 6:45 PM GMT (Updated: 3 Oct 2023 6:46 PM GMT)

நீடாமங்கலம் அருகே இருவழிச்சாலை பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு சாலைகள் திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே இருவழிச்சாலை பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு சாலைகள் திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இருவழிச்சாலை

தஞ்சாவூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான இருவழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீடாமங்கலம் அருகே கோவில் வெண்ணியிலிருந்து இருவழிச்சாலை தொடங்குகிறது.ஆறுகள், வாய்க்கால்களின் குறுக்கே போக்குவரத்து பாலங்களும் கட்டப்பட்டு வருகிறது.

நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணைக்கு அருகாமையில் நரசிங்கமங்கலம் கிராமத்திற்கும் குருவாடி கிராமத்துக்கும் இடையே பெரியவெண்ணாற்றின் குறுக்கே போக்குவரத்து பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.இதன் பணிகள் பெருமளவில் நிறைவடைந்துள்ளது.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

இந்த நிலையில் இந்த பாலத்தின் இருபுறமும் இணைப்புச்சாலை அமைத்து பணிகள் முடிவடைந்தால் தான் கோவில்வெண்ணியிலிருந்து நார்த்தாங்குடி வரை இந்த சாலையில் வாகனங்கள் வந்து கும்பகோணம், குடவாசல் உள்ளிட்ட ஊர்களுக்கு நீடாமங்கலத்திற்குள் செல்லாமல் போக முடியும்.

இதேபோல் அபிவிருத்தீஸ்வரம், ஊர்குடி ஆகிய பகுதிகளிலும் ஆறுகளின் குறுக்கே பாலங்கள் கட்டும் பணிகள் பெருமளவில் நடந்து முடிந்துள்ளது. முழு அளவிலும் இந்த பகுதியில் பணிகள் நிறைவடைந்தால் கோவில் வெண்ணியிலிருந்து திருவாரூர் சாலையை எளிதில் சென்றடைய முடியும். இதன் மூலம் லாரிகள், இதர கனரக வாகனங்களின் போக்குவரத்து நெருக்கடி நீடாமங்கலத்தில் குறைய வாய்ப்புள்ளது. இந்த சாலை பணிகள் நிறைவடைந்து விரைவில் போக்குவரத்து தொடங்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story