மின் மீட்டர் தட்டுப்பாடு நீங்குமா?
சீர்காழி பகுதியில் மின் மீட்டர் தட்டுப்பாடு நீங்குமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சீர்காழி பகுதியில் மின் மீட்டர் தட்டுப்பாடு நீங்குமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மின் இணைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் புதிய மின் இணைப்பு வேண்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பணம் கட்டி பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை புதிய மின் மீட்டர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
மேலும் மின் மீட்டர் வராததால் புதிய மின் இணைப்பு வேண்டி பதிவு செய்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்காமல் காலதாமதம் ஆவதாகவும் பொதுமக்கள் கூறுகிறார்கள். இதனால் புதிதாக வீடு கட்டுபவர்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
முறையான பதில் இல்லை
2 மாதங்களாக மின் மீட்டர் வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் முறையிட்டால் முறையான பதில் கிடைப்பது இல்லை. மேலும் தமிழக அரசு புதிய மின் மீட்டர்களை வழங்கினால்தான் புதிய மின் இணைப்பை வழங்க முடியும் என மின்சார துறையினர் மின் நுகர்வோர்களிடம் அலட்சியமாக பதில் தெரிவித்து வருகின்றனர். இதனால் மின் இணைப்பு வேண்டி பதிவு செய்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக மின் மீட்டரை பொருத்தி புதிய மின் இணைப்பை வழங்க வேண்டும்.
2 மடங்கு கட்டணம்
முன்பு புதிய மின் இணைப்பு வேண்டி குறைவான தொகையை டெபாசிட் செய்து மின் இணைப்பை பெற்று வந்தோம். ஆனால் மின் இணைப்பு பெறுவதற்கு தற்போது 2 மடங்கு கூடுதலாக அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. கூடுதலாக பணம் கட்டினாலும் மீட்டர் இல்லை. எனவே மின் மீட்டர் தட்டுப்பாட்டை நீக்கி காலம் தாழ்த்தாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.