கிணத்துக்கடவில் பழுதடைந்த தடுப்பணைகள் சீரமைக்கப்படுமா? -விவசாயிகள் எதிர்பார்ப்பு


கிணத்துக்கடவில் பழுதடைந்த தடுப்பணைகள் சீரமைக்கப்படுமா?   -விவசாயிகள் எதிர்பார்ப்பு
x

கிணத்துக்கடவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் பழுதடைந்த தடுப்பணைகள் சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் பழுதடைந்த தடுப்பணைகள் சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

பழுதடைந்த தடுப்பணைகள்

தமிழகம் முழுவதும் மழைநீர் சேமிப்பதற்கு குட்டைகள் தடுப்பணைகள் என பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு மழைநீர் சேகரிக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வந்தது. மழைநீர் சேகரிக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிராமப்புறங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கி விவசாயமும் சிறப்பாக நடைபெற்று வந்தது. தற்போது கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட மழைநீர் சேகரிப்பு குட்டைகள், தடுப்பணைகள் என ஏராளமாக உள்ளன. தற்போது அந்த மழைநீர் சேகரிப்பு குட்டைகள், தடுப்பணைகள் பல இடங்களில் பழுதடைந்து உடைந்து கிடக்கின்றன.

இதனால் தடுப்பணையில் தண்ணீர் சேகரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பல பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குட்டை அமைக்கப்பட்ட பகுதியில் புதர் மண்டி கிடக்கின்றன. சில இடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் குட்டைகள் அழிந்து போயுள்ளன. இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-

சீரமைக்க வேண்டும்

தமிழகத்தில் மழை நீரை சேமிக்க மழைநீர் சேகரிப்பு குட்டைகள் ஆங்காங்கே கிராமப்பகுதிகளில் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் இந்த குட்டைகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்து வந்தனர். தற்போது கிராம பகுதிகளில் உள்ள மழை நீர் சேகரிப்பு குட்டைகள் புதர் மண்டி காணப்படுகிறது. சில பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் கூட பழுதடைந்து உடைந்த நிலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. ஆனால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் யாரும் மழைநீர் சேகரிப்பு குட்டைகளையும், தடுப்பணைகளை பார்வையிட வருவதில்லை. விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் புதர் மண்டி கிடக்கும் மழைநீர் சேகரிப்பு குட்டைகள் மற்றும் தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும். தண்ணீரை கிராமப் பகுதிகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு குட்டை, தடுப்பணைகளில் சேமித்து விவசாய பணிக்கும் கிராமப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க ஏதுவாக இருக்கும். மாவட்ட கலெக்டர் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள மழைநீர் சேகரிப்பு குட்டை மற்றும் தடுப்பணைகளை பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story