மாலை நேரத்தில் மீண்டும் அரசு பஸ் இயக்கப்படுமா?
கொடியம்பாளையம் கிராமத்துக்கு மாைல நேரத்தில் மீண்டும் அரசு பஸ் இயக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொடியம்பாளையம் கிராமத்துக்கு மாைல நேரத்தில் மீண்டும் அரசு பஸ் இயக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கொடியம்பாளையம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ளது கொடியம்பாளையம் கிராமம் ஆகும். தனி ஊராட்சியாக செயல்பட்டு வரும் இந்த கிராமத்திற்கு பழையாறு துறைமுகத்தில் இருந்து படகில் மட்டுமே சென்று வர முடியும்.
சாலை வழியாக செல்ல வேண்டுமானால் கொள்ளிடத்தில் இருந்து சிதம்பரம் மற்றும் இளந்திரை மேடு கிராமம் வழியாக சென்று அப்பகுதியில் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தைக் கடந்து தான் கொடியம்பாளையம் செல்ல வேண்டும்.
படகில் சென்று வருகின்றனர்
30 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் கொள்ளிடம் பகுதியில் இருந்து செல்ல வேண்டி இருப்பதால் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து செல்லும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் ஆற்றில் படகில் வந்து பழையாறு துறைமுகத்துக்கு வந்து பின்னர் கொள்ளிடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அலுவலக நிமித்தமாக வந்து செல்கின்றனர். கொடியம்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் கொள்ளிடத்தில் இருந்து சாலை வழியாக சென்று வருகின்றனர். சில நேரங்களில் படகுகளில் சென்றும் வருகின்றனர்.
குண்டும், குழியுமான சாலை
இந்த நிலையில் கொடியம்பாளையம் கிராமத்துக்கு சிதம்பரத்துக்கு செல்லும் 16 கிலோமீட்டர் தூர தார்ச்சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இந்த சாலை கொள்ளிடம் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால் சிதம்பரம், பிச்சாவரம் மற்றும் கிள்ளை செல்லும் கிராம மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த தார்ச்சாலையை மேம்படுத்த வேண்டும்.மேலும் சிதம்பரத்தில் இருந்து கொடியம்பாளையம் கிராமத்துக்கு சென்று வரும் அரசு பஸ் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் வந்து சென்று கொண்டிருந்தது.
மாலை நேரத்தில் பஸ் இயக்க வேண்டும்
கடந்த 5 மாதமாக இந்த அரசு பஸ் மாலை நேரம் வருவது கிடையாது. இதனால் வெளியூர்களில் இருந்து கொடியம் பாளையம் கிராமத்துக்கு வருபவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மாலை நேரத்தில் தனியார் பஸ் மட்டுமே வந்து செல்கிறது.
இதன் காரணமாக சிதம்பரத்தில் இருந்து கொடியம்பாளையத்துக்கு பஸ்சில் செல்பவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாலை நேரத்திலும் கொடியம்பாளையத்துக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.