பழுதடைந்த மரக்கடை வடிகால் வாய்க்கால் தரைப்பாலம் சீரமைக்கப்படுமா?
பழுதடைந்த மரக்கடை வடிகால் வாய்க்கால் தரைப்பாலம் சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே பழுதடைந்த மரக்கடை வடிகால் வாய்க்கால் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரக்கடை வடிகால் வாய்க்கால் தரைப்பாலம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் செல்லும் சாலையின் குறுக்கே அந்த பகுதி விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மரக்கடை வடிகால் வாய்க்கால் தரைப்பாலம் கட்டப்பட்டது. மரக்கடை, ராமநாதன்கோவில், அதங்குடி ஆகிய கிராமங்களில் உள்ள 700 ஏக்கர் விவசாய நிலங்களில், ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரும் நேரங்களிலும், மழை காலங்களிலும் வயல்களில் அதிகளவில் தேங்கி நிற்கும் தேவையற்ற தண்ணீரை அந்த பகுதி விவசாயிகள் இந்த மரக்கடை வடிகால் வாய்க்கால் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
கடந்த 10 ஆண்டுகளாக மரக்கடை வடிகால் வாய்க்கால் தரைப்பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் பாலத்தின் தரைதளம் மற்றும் தடுப்புச்சுவர்கள் உடைந்தும், விரிசல்கள் ஏற்பட்டும் உள்ளது. இதனால் பாலத்தின் தன்மை பலம் இழந்து உள்ளதாகவும், இதனால் பாலம் உள்வாங்கி தண்ணீர் செல்வதை தடுக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும். மேலும் பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.