கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?


கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

'அனைத்து சாலைகளும் ரோமாபுரிக்கு இட்டுச்செல்கின்றன' என்ற சொல் வழக்கு உண்டு. அதுபோல கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் எல்லோருடைய பார்வையும் கர்நாடகாவை நோக்கியே இருந்தன. கடந்த 10-ந் தேதி அங்கு வாக்குப்பதிவு நடந்தது. 13-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

தேர்தல் பிரசாரம்

கர்நாடகம் மிகவும் வித்தியாசமான முறையில் தேர்தல்களை சந்திக்கும் மாநிலமாகும். அங்கு ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெற்றால், அடுத்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இந்த தேர்தலில் அந்த வரலாற்றை முறியடித்தே தீருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் சபதம் எடுத்து பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றினார்கள். காங்கிரசும் விட்டு வைக்கவில்லை.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரம் செய்தனர். முடிவில் காங்கிரஸ் 136 இடங்களும், பா.ஜ.க. 65 இடங்களிலும் வெற்றி பெற்றன. 'எங்கள் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என்று உறுதியாக நம்பிக்கொண்டு இருந்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது தான் மக்களின் எண்ண ஓட்டம்.

மக்களின் கருத்துகள்

வரப்போகும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 'இதுதான் எதிரொலிக்கும் என்று எதிர்க்கட்சிகளும்', 'இல்லை, இல்லை மாநில தேர்தல்களின் முடிவுகள் மத்தியில் எதிரொலிக்க வாய்ப்பே இல்லை' என்று பா.ஜ.க. ஆதரவாளர்களும் உறுதியாக கூறுகிறார்கள். இந்தநிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என்று அரசியல் கலப்பில்லாத மக்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

பெரும்பான்மையுடன் வெற்றி

ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி விருதுநகரை சேர்ந்த ஊர்க்காவலன்:-

கர்நாடக மாநிலத்தில் கருத்துக்கணிப்புகளையும் மீறி காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் இதே நிலை எதிரொலிக்குமா என்ற கேள்வி மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்படுவது இயல்பு தான். கர்நாடகத்தில் பிரதமர் உட்பட மத்திய மந்திரிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையிலும் அங்கு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இல்லை. எனவே நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கர்நாடக தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோடியாக இருக்க வாய்ப்புள்ளது என கருத இடம் உள்ளது.

மத்தியில் ஆட்சி

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மூத்த வக்கீல் சவுந்தரராஜன்:- கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு அந்த மாநிலத்தை பொருத்தது. சட்டமன்ற தேர்தல் என்பது வேறு. நாடாளுமன்ற தேர்தல் என்பது வேறு. ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் மனநிலை மாறும். அதை வைத்து ஆட்சி அமையும். கர்நாடக தேர்தலை வைத்து காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வரும் என்றும், பா.ஜனதாவுக்கு பின்னடைவு என்றும் கூறி விட முடியாது. சட்டமன்ற தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் ஒப்பிடக்கூடாது.

எதிர்பார்ப்பு

ராஜபாளையம் கல்லூரி பேராசிரியர் ஞான வேலாயுதம்:-

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இனி வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஒரு வித எதிர்பார்ப்பு பூர்த்தியடையாமல் இருப்பதே இதற்கு காரணம். தொடர்ந்து இரு முறை மத்தியில் ஆட்சி புரிந்து விலைவாசி ஏற்றம், தொழில் நழிவு, விவசாயத்துறையில் பின்னடைவு போன்ற பல்வேறு காரணங்களை கூறலாம். தென்னிந்தியாவில் ஏற்கனவே ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் உள்ளனர். அதேபோன்று வட இந்தியாவிலும் ஆளும் கட்சியின் செல்வாக்கு குறைந்து வருவதையும் நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.

எதிரொலிக்க வாய்ப்பு

காரியாபட்டியை சேர்ந்த மோகன்:-

கர்நாடகா மாநிலத்தில் தற்போது நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் எதிரொலிக்காது. இது அந்த மாநிலத்தில் மட்டுமே இருக்குமே தவிர அனைத்து மாநிலங்களிலும் எதிரொலிக்க வாய்ப்பு இல்லை.

வட மாநிலங்களில் பெரும்பாலும் பா.ஜ.க. ஆட்சியில் இருந்து வருகிறது. இதனால் இதன் தாக்கம் கர்நாடகாவில் மட்டும் தான் இருக்கும்.

வாக்குறுதிகள்

தாயில்பட்டி அருகே உள்ள ேகாட்டையூரை சேர்ந்த இல்லத்தரசி சண்முகலட்சுமி:-

கர்நாடக மாநிலத்தில் தற்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இ்ந்த வெற்றி நிர்ணயித்தது மக்கள் தான். மக்கள் எந்த அரசை விரும்புகிறோர்களோ அவர்களே வெற்றி பெறுவர். அது எந்த தேர்தலாக இருந்தாலும் சரி.

இந்த வெற்றிக்கும், நாடாளுமன்ற தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. என்னதான் கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகள் அளித்தாலும் மக்களின் மனநிலையை பொறுத்து தான் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பதற்கு சரியான உதாரணம் இந்த தேர்தல்.

ஒப்பிட முடியாது

ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணன்:-

இந்தியா என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசும் மக்கள் உள்ளனர்.

அந்தந்த மாநிலத்தின் கட்சிகளின் செல்வாக்கை பொருத்தும், மக்களுக்கு செய்யும் பல நல்ல திட்டங்களின் அடிப்படையிலும் மாநில கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஆனால் மத்திய அரசை நிர்ணயிக்கும் போது மக்களின் மனநிலை மாறும். அந்த மனநிலைக்கு ஏற்றாற்போல் மத்திய அரசு அமையும். தேசிய கட்சிகள் ஆட்சி அமைக்கும் போது மக்களின் மனநிலை, மக்களுக்காக செய்த திட்டங்கள் குறித்து அவற்றை பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும். சட்டமன்ற தேர்தல் முடிவுகளை கொண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஒப்பிட முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story