குப்பை மேடாக மாறிய கரூர் இரட்டை வாய்க்கால் முறையாக சீர் செய்யப்படுமா?


குப்பை மேடாக மாறிய கரூர் இரட்டை வாய்க்கால் முறையாக சீர் செய்யப்படுமா?
x

குப்பை மேடாக மாறிய கரூர் இரட்டை வாய்க்கால் முறையாக சீர் செய்யப்படுமா? என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

இரட்டை வாய்க்கால்

கரூர் நகரின் துயரம் என அழைக்கப்படும் அளவில் கரூர் இரட்டை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் ஆண்டாங்கோவில் பகுதியில் இருந்து தொடங்கி சின்ன ஆண்டாங்கோவில் படித்துறை மக்கள் பாதை வழியாக ஜவகர் பஜார், மார்க்கெட் உள்ளிட்ட பகுதி வழியாக அரசு காலனி வரை சுமார் 5 கிலோ மீட்டர் வரை செல்கிறது.

இந்த வாய்க்கால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாசன வாய்க்காலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த வாய்க்கால் நீரினை கொண்டு விவசாயமும் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் நாளடைவில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகவும், வயல் வெளிகள், குடியிருப்புகளாக மாறியதன் விளைவாகவும், வாய்க்காலை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் குடியிருப்பு பகுதிகளாக மாறிப்போனது.

புதர்மண்டி காட்சியளிக்கிறது

இதனால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வாய்க்காலில் கொட்டி விடுகின்றனர். இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இரட்டை வாய்க்காலில் அப்படியே வெளியேறி வருதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் வாய்க்கால் கழிவுநீர் ஓடையாக மாறியது.

இந்தநிலையில் அவ்வப்போது இரட்டை வாய்க்கால் தூர்வாரப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டாலும் மீண்டும் குப்பை கொட்டும் இடமாக மாறி போனது. தற்போது வாய்க்காலில் புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் தண்ணீர் செல்ல வழியில்லாமல் வாய்க்கால் முழுவதும் குப்பை மேடாக மாறியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு

இந்நிலையில் வாய்க்காலில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும், கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், பிளாஸ்டிக் கழிவு பொருட்களை வாய்க்காலில் போடுவதை தவிர்க்கும் வகையில் ரூ 3.62 கோடி மதிப்பில் மக்கள் பாதை முதல் மார்க்கெட் வரை வாய்க்காலின் மேல்பரப்பிலும் பக்கவாட்டின் இருபுறங்களிலும் சிமெண்டு கான்கிரீட் அமைத்து மூடப்பட்டன.

இதனால் மக்கள் பாதை முதல் மார்க்கெட் வரை உள்ள இரட்டை வாய்க்கால் பகுதி தூய்மையாக உள்ளது. ஆனால் சின்ன ஆண்டாங்கோவிலில் இருந்து மக்கள் பாதை வரை இரட்டை வாய்க்கால் பகுதியில் தற்போது மழைக்காலம் என்பதால் செடிகள் முளைத்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் குப்பை மேடாகவும் மாறி வருகிறது. எனவே இரட்டை வாய்க்காலை முழுமையாக சுத்தம் செய்து கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

தூர்வார வேண்டும்

கரூர் வெங்ககல்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்:-

கரூர் இரட்டை வாய்க்கால் என்பது பாசன வாய்க்காலாக பயன்பட்டு வந்தது. காலப்போக்கில் குப்பை கொட்டும் இடமாகவும், சாக்கடை கழிவுநீர் வெளியேறும் வாய்க்காலாகவும் மாறி உள்ளது. தற்போது கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே வருங்கால தலைமுறையினர் நலனை கருத்தில் கொண்டு இரட்டை வாய்க்காலை சுத்தம் செய்து, தூர்வாரி வெள்ளநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கையான வாய்க்கால்

கரூர் வெங்கமேட்டை சேர்ந்த மூர்த்தி:-

கரூர் ஆண்டாங்கோவிலில் இருந்து வரும் இரட்டை வாய்க்கால் சின்ன ஆண்டாங்கோவில் வழியாக வந்து அமராவதி ஆற்றில் கலக்கும் வகையில் இயற்கையாக அமைந்துள்ளது. இந்நிலையில் அவ்வப்போது இரட்டை வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டாலும் பிறகு அதில் வீட்டு கழிவுகளை கொட்டுவதன் மூலம் புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

நிலத்தடி நீர்மட்டம் உயரும்

கரூர் ஆதிகிருஷ்ணபுரத்தை சேர்ந்த லோகநாதன்:-

கரூர் இரட்டை வாய்க்காலில் உள்ள முட்செடிகள் மற்றும் புதர்களை அகற்றி கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும், மழைக்காலங்களில் அமராவதி ஆற்றில் வரும் நீரை வாய்க்காலில் திருப்பி விட வேண்டும். இவ்வாறு விடுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், மேலும் வருங்காலத்தில் இரட்டை வாய்க்கால் பகுதியை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் கழிவுநீர் கலக்காமல் இருக்கும் வகையில் நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story