நடமாடும் ஆலோசனை மைய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா?

பள்ளி மாணவர்கள் தடையின்றி கல்வியில் சிறந்து விளங்க நடமாடும் ஆலோசனை மைய திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என திருவாரூர் மாவட்ட பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி மாணவர்கள் தடையின்றி கல்வியில் சிறந்து விளங்க நடமாடும் ஆலோசனை மைய திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என திருவாரூர் மாவட்ட பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உளவியல் ஆலோசனை
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், குடும்ப நிலை, மனச் சோர்வு, மன குழப்பம், பாலியல் பிரச்சனை, தேர்வு அச்சம், மதிப்பெண் நெருக்கடி போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்காக உளவியல் ஆலோசனை வழங்க நடமாடும் ஆலோசனை மையம் திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.
வேன் வழங்கப்பட்டது
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு சேர்த்து ஒரு நடமாடும் ஆலோசனை மையத்துக்கு வேன் வழங்கப்பட்டது. இந்த வேனில் ஒரு உளவியல் ஆலோசகர் என்ற நிலையில் டாக்டர் நியமிக்கப்பட்டு, 3 மாவட்டங்களில் பிரச்சினை உள்ள பள்ளிகளை கண்டறிந்து மாணவ-மாணவியருக்கு உளவியல் ஆலோசனை அளிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ஒரு மொபைல் வேன் வழங்கப்பட்டது. வேனை இயக்க ஒட்டுநரும் நியமிக்கப்பட்டார்.
நிறுத்தப்பட்டது
குறிப்பிட்ட காலம் வரை பள்ளிகளுக்கு சென்று மாணவ-மாணவியர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் உளவியல் ஆலோசனை வழங்க ஒப்பந்த அடிப்படையில் குறைவான சம்பளத்தில் டாக்டர் நியமிக்கப்பட்டதால், தொடர்ந்து டாக்டர்கள் வருகை குறைந்தது. மேலும் இந்த திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படாததால் நடமாடும் ஆலோசனை மையத்தின் பயன்பாடு கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து நிறுத்தப்பட்டது. இதே நிலை தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது.
புகார் பெட்டி
இதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக திருவாரூர் கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பயன்பாடுன்றி நடமாடும் ஆலோசனை மைய வேன் நிறுத்தப்பட்டு, காட்சி பொருளாக மாறி வருகிறது. தற்போது மாணவ-மாணவிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் புகார் பெட்டி அனைத்து பள்ளிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதைப்போல மாணவர்களிடையே மோதல், தவறான பழக்கங்கள், தற்கொலை போன்றவற்றை தடுக்க மீண்டும் பள்ளி கல்வித்துறை மூலம் நடமாடும் ஆலோசனை மைய வேன் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கும் நோக்கத்தில் நடமாடும் ஆலோசனை மைய வேன் திட்டம் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. அதற்கான டிரைவர், உளவியல் ஆலோசகர் என்ற நிலையில் டாக்டரும் சரிவர நியமிக்கப்படவில்லை. எனவே மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க உளவியல் ஆலோனை திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினா்.






