குட்டை மேலத்தெருவில் புதிய பாலம் அமைக்கப்படுமா?


குட்டை மேலத்தெருவில் புதிய பாலம் அமைக்கப்படுமா?
x

நாமக்கல் நகராட்சி 12-வது வார்டு குட்டை மேலத்தெருவில் கழிவுநீர் மற்றும் மழைநீர் எளிதில் செல்லும் வகையில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாமக்கல்

12-வது வார்டு

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 12-வது வார்டில் ராமாபுரம்புதூர், பொன் கைலாஷ் கார்டன், குட்டை மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த வார்டில் 2 ரேஷன்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த வார்டு பழைய நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருப்பதால், பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமலில் இருந்து வருகிறது. இதனால் கழிவுநீர் பிரச்சினை இல்லை. இந்த வார்டில் 1,134 ஆண்கள், 1,238 பெண்கள் என மொத்தம் 2,372 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுரேஷ்குமார் வெற்றிபெற்றார்.

இந்த வார்டில் குட்டை மேலத்தெருவில் சிறுபாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் உயரம் குறைவாக இருப்பதால், கழிவுநீர் மற்றும் மழைநீர் சரியாக செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு புதிதாக பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மற்ற வார்டுகளை போன்று இந்த வார்டிலும் சாலைவசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

இது குறித்து ராமாபுரம்புதூரை சேர்ந்த பூங்கொடி கூறியதாவது:-

எங்கள் பகுதியில் கடந்த 2004-ம் ஆண்டில் கட்டப்பட்ட பழமையான மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டி தற்போது பழுதான நிலையில் உள்ளது. எனவே அதை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய்களை முழுமையாக பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் பொன்கைலாஷ் கார்டன் பகுதியில் பூங்காவுக்கு என்று ஒதுக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது. இங்கு பூங்கா அமைத்து கொடுத்தால், இப்பகுதி சிறுவர், சிறுமிகள் மாலை நேரங்களில் பொழுது போக்க வசதியாக இருக்கும்.

பாலம் கட்ட வேண்டும்

குட்டை மேலத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன்:-

குட்டை மேலத்தெருவில் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்ல வசதியாக பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிறுபாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில், உயரம் குறைவாக உள்ளது. இதனால் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே அப்பகுதியில் மழைநீர் வடிகாலை புதுப்பித்து, தற்போது உள்ள பாலத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிதாக பாலம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் பொன் கைலாஷ் கார்டன் பகுதியில் கிருஷ்ணர் கோவில் ஒன்று உள்ளது. இப்பகுதி இரவு நேரங்களில் கும்மிருட்டாக காட்சி அளிப்பதால், திருடர்கள் பயம் உள்ளது. மேலும் பாம்பு நடமாட்டமும் இருந்து வருகிறது. எனவே கிருஷ்ணர் கோவில் அருகில் உயர்மின் கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும்.


Next Story