பழைய போலீஸ் நிலைய கட்டிடம் அகற்றப்படுமா?


பழைய போலீஸ் நிலைய கட்டிடம் அகற்றப்படுமா?
x

கிணத்துக்கடவில் பழைய போலீஸ் நிலைய கட்டிடம் அகற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் பழைய போலீஸ் நிலைய கட்டிடம் அகற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பழைய கட்டிடம்

கிணத்துக்கடவு மெயின்ரோட்டில் பழைய போலீஸ் நிலைய கட்டிடம் உள்ளது. இது சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டிடம் ஆகும். இந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அதற்கு பின்புறம் உள்ள பகுதியில் குடியிருப்புகளுடன் கூடிய போலீஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டது.

இந்தநிலையில் பழைய போலீஸ் நிலைய கட்டிடம், இதுவரை அகற்றப்படவில்லை. அது மிகவும் சிதிலமடைந்த நிலையில், காட்சி அளிக்கிறது. இது தவிர அந்த கட்டிட வளாகம் முழுவதும் புதர் செடிகளால் சூழப்பட்டு கிடக்கிறது. அங்கு பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் அதிகளவில் வாழ்ந்து வருகிறது. அவை இரவு நேரங்களில் புதிய போலீஸ் நிலையம் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகின்றன. இதனால் அங்குள்ள போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அச்சப்படுகிறார்கள்.

விஷ ஜந்துகள்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பழைய போலீஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்த நிலையில், நீண்ட நாட்களாக இடிக்கப்படாமல் உள்ளது. அது தற்போது உள்ள புதிய போலீஸ் நிலையத்தை மறைத்த நிலையில் காணப்படுகிறது. யாருக்கும் பயனின்றி உள்ள அந்த கட்டிடத்தை புதர் செடிகள் ஆக்கிரமித்து உள்ளன.

அங்கு விஷ ஜந்துகள் அதிகளவில் காணப்படுகின்றன. அவைகளால் போலீசார் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பழைய போலீஸ் நிலைய கட்டிடத்தை அகற்றிவிட்டு பயனுள்ள வகையில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story