பரவாக்கோட்டை-இலுப்பைதோப்பு சாலை சீரமைக்கப்படுமா?
விவசாய நிலங்களுக்கு இடுபொருட்கள் கொண்டு செல்லும் பரவாக்கோட்டை-இலுப்பைதோப்பு சாலை சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
மன்னார்குடி:
விவசாய நிலங்களுக்கு இடுபொருட்கள் கொண்டு செல்லும் பரவாக்கோட்டை-இலுப்பைதோப்பு சாலை சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
மன்னார்குடி ஒன்றியம் பரவாக்கோட்டை-இலுப்பை தோப்பு சாலை விவசாய பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். இப்பகுதியில் உள்ள 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்வதற்கும், விவசாய நிலங்களில் விளைந்த வேளாண்மை உற்பத்தி பொருட்களை அறுவடை செய்து எடுத்து வருவதற்கும் இந்த சாலையை தான் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கண்ட சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விளை நிலங்களுக்கு வேளாண் இடுபொருட்கள் கொண்டு செல்லவும், அறுவடை செய்த விளைபொருட்களை கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை இந்த சாலை சீரமைக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரவாக்கோட்டை- இலுப்பைதோப்பு சாலையை சீரமைத்து கொடுத்தால், இந்த சாலையை பயன்படுத்தும் விவசாயிகள் வயல்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்வதற்கும், வயல்களில் விளைந்த வேளாண் விளைபொருட்களை மீண்டும் எடுத்து வருவதற்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.