தும்மங்குறிச்சியில் பூங்கா அமைக்கப்படுமா?
நாமக்கல் நகராட்சி 8-வது வார்டு தும்மங்குறிச்சியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
8-வது வார்டு
நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 8-வது வார்டில் தும்மங்குறிச்சி, கிருஷ்ணாபுரம், பெரியூர், நத்தமேடு, ஊத்துக்காடு, பள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன. இங்கு கிருஷ்ணாபுரம், பெரியூர் பகுதிகளில் அரசு தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தும்மங்குறிச்சியில் அரசுஉதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. தும்மங்குறிச்சியில் ரேஷன்கடை ஒன்று இயங்கி வருகிறது.
தும்மங்குறிச்சி ஊராட்சியின் ஒரு பகுதியை பிரித்து இந்த வார்டு உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த வார்டு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் அதிகம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த வார்டில் 1,081 ஆண்கள், 1,148 பெண்கள், 11 இதரர் என மொத்தம் 2,240 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அம்சா வெற்றிபெற்றார்.
பாதாள சாக்கடை வசதி
நாமக்கல் நகராட்சியை பொறுத்த வரையில் புதிதாக இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளில் இன்னும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவேற்றப்படவில்லை. இதில் 8-வது வார்டும் அடங்குகிறது. இதனால் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் பிரச்சினை இருந்து வருகிறது. சுமார் ரூ.300 கோடியில் பாதாள சாக்கடை அமைக்க அரசு அனுமதி அளித்து உள்ள நிலையில், அந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த வார்டில் பொழுதுபோக்கு அம்சம் எதுவும் இல்லை. எனவே பூங்கா அமைக்க வேண்டும். மண்சாலைகள் அதிக அளவில் இருப்பதால் அவற்றை தார்சாலைகளாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதவிர தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என்கிற கோரிக்கையும் இருந்து வருகிறது.
பொழுதுபோக்கு பூங்கா
தும்மங்குறிச்சியை சேர்ந்த சக்தி:-
கிருஷ்ணாபுரம் ஆலமரத்தெருவில் 80 குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் குடோன் முதல் திருச்செங்கோடு சாலை வரையிலும், கிருஷ்ணாபுரம் நடுத்தெரு முதல் ஆலமரத்தெரு வரையிலும் சாலை மிகவும் பழுதான நிலையில் உள்ளது. அதை புதுப்பித்து தர வேண்டும்.
இதேபோல் தும்மங்குறிச்சி தெற்கு தோட்டம் மண்சாலை மற்றும் ஊத்துக்காடு முதல் பள்ளக்காடு வரை உள்ள மண்சாலை ஆகியவற்றை தார்சாலையாக மாற்றி தரவேண்டும். தும்மங்குறிச்சி வடிகால் பாதையை சீரமைத்து, குழாய் மூலம் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். பொது கழிப்பிடம் கட்டித்தர வேண்டும். தும்மங்குறிச்சியில் நூலகம் கட்டி பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பொழுதுபோக்கு பூங்கா அமைத்து தர வேண்டும்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மீனா:-
தற்போது எங்களது வார்டை சேர்ந்த அனைவரும் தும்மங்குறிச்சியில் உள்ள ரேஷன்கடையில் தான் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகிறோம். இதனால் அவ்வப்போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க பெரியூரில் கூடுதலாக ரேஷன்கடை ஒன்றை திறக்க வேண்டும். மேலும் எங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமாக விபத்து நடப்பதால், தும்மங்குறிச்சி 4 ரோடு, பெரியூர் பகவதி அம்மன் கோவில் முன்பு மற்றும் கிருஷ்ணாபுரம் தொடக்கப்பள்ளி முன்பு என 3 இடங்களில் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
கிருஷ்ணாபுரத்தில் பொதுக்கழிப்பிடம் ஒன்றை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தும்மங்குறிச்சியில் இருந்து நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 40 குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு சென்று வர காலை 8.15 மணிக்கு டவுன் பஸ் ஒன்று இயக்கப்படுகிறது. ஆனால் மாலையில் இந்த பஸ் பல்வேறு இடங்களுக்கு சுற்றி 6 மணிக்கு பிறகு தான் எங்கள் பகுதிக்கு வருகிறது. எனவே மாணவ, மாணவிகள் மாலை 5 மணிக்குள் வரும் வகையில் பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.