அழகிய ஸ்மார்ட் சிட்டி பூங்காக்களில் அவல நிலை மாறுமா?


அழகிய ஸ்மார்ட் சிட்டி பூங்காக்களில் அவல நிலை மாறுமா?
x
தினத்தந்தி 31 July 2023 1:00 AM IST (Updated: 31 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

அழகிய ஸ்மார்ட் சிட்டி பூங்காக்கள் பராமரிப்பு இல்லாத அவல நிலையில் உள்ளது. புதர்கள் மண்டி கிடப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கோவை

அழகிய ஸ்மார்ட் சிட்டி பூங்காக்கள் பராமரிப்பு இல்லாத அவல நிலையில் உள்ளது. புதர்கள் மண்டி கிடப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம், கிருஷ்ணாம்பதி குளம் உள்ளிட்ட குளங்கள் ரூ.300 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குளங்களின் கரைப்பகுதியில் அழகிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு, அலங்கார விளக்குகள், சிறுவர்கள் விளையாட பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் ஆகியவற்றில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வருகின்றனர். குறிப்பாக சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அலை மோதும்.

பராமரிப்பு இல்லாத அவலம்

பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் பூங்காவில் தற்போது புதர்கள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக செல்வசிந்தாமணி குளம், செல்வாம்பதி குளக்கரைகளில் உள்ள பூங்காக்களில் எருக்கம் செடி, ஆமணக்கு செடி, பார்த்தீனியம் செடிகள் அதிகளவில் வளர்ந்து உள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கோவை மக்களுக்கு பொழுதுபோக்கு மையங்கள் குறைவாக உள்ளன. இந்த நிலையில் குளங்கள் மேம்படுத்தப்பட்டு பல்வேறு வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து உள்ளது. இது வரவேற்க கூடியது. ஆனால் அதே நேரத்தில் குளக்கரையில் அமைக்கப்பட்டு உள்ள இந்த பூங்காக்கள் போதிய பராமரிப்பு இல்லா அவல நிலையில் காணப்படுகிறது.உக்கடம் பெரிய குளத்தில் ஒரு பகுதி மட்டுமே சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் எருக்கம் செடிகள், புதர்கள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் குழந்தைகளுடன் செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல் செல்வ சிந்தாமணி குளத்தில் நிழற்குடை, பார்வை மாடம் என ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. இங்குள்ள புல்வெளியில் புற்களுக்கு பதிலாக புதர் செடிகள், குப்பைகள் காணப்படுகின்றன. இதனால்விஷஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.எனவே ஸ்மார்ட் சிட்டி பூங்காவை முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

போதிய பராமரிப்பு இல்லாத அழகிய ஸ்மார்ட் சிட்டி பூங்காக்களின் அவல நிலை மாறுமா என்பது பொதுமக்கள் கேள்வியாக உள்ளது.


Next Story