மண் திட்டின் மேல் செயல்படும் போலீஸ் நிலையம் இடம் மாற்றப்படுமா?


மண் திட்டின் மேல் செயல்படும் போலீஸ் நிலையம் இடம் மாற்றப்படுமா?
x

தவிட்டுப்பாளையத்தில் மண் திட்டின் மேல் செயல்படும் போலீஸ் நிலையம் இடம் மாற்றப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

புதிய போலீஸ் நிலையம்

கரூர் மாவட்டம் தவிட்டுபாளையத்தில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தவிட்டுப்பாளையத்தில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அருகே போலீஸ் நிலையம் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மேம்பாலம் அமைக்கும் இடத்தில் போலீஸ் நிலையம் இருப்பதால் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தடைபட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழைய போலீஸ் நிலையத்தை அகற்றிவிட்டு, மாற்று இடத்தில் அந்த போலீஸ் நிலையத்தை புதிதாக கட்டித் தர ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி ஆற்று பாலம் அருகே (நன்செய் புகழூர் பிரிவு சாலை அருகே.) ஏராளமான மண்களை கொட்டி அந்த மண் திட்டுக்கு மேல் குறைந்த அளவு குழி பறித்து புதியதாக ஹாலோ பிளாக் கற்கள் மூலம் புதிய போலீஸ் நிலையம் கட்டப்பட்டது.

ஆபத்தான நிலையில்...

இதனால் பழைய போலீஸ் நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து வந்து புதிய போலீஸ் நிலையத்தில் வைத்து விட்டனர். இதனால் பழைய போலீஸ் நிலையம் இடிக்கப்பட்டது. தற்பொழுது புதிய போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மண் திட்டுக்கு மேல் போலீஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளதால் வரும் காலங்களில் தொடர்ந்து கனமழை பெய்தால் மண் திட்டு சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக கொட்டப்பட்டுள்ள மண்கள் அனைத்தும் கரைந்து வெளியேறிவிடும். அவ்வாறு மண் திட்டில் உள்ள மண்கள் சரிந்தால் அதன் மேல் கட்டுப்பட்டு உள்ள போலீஸ் நிலையம் திடீரென கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பெரும் ஆபத்து ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்படும் சூழ்நிலையில் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன் மண் திட்டை சுற்றி சுவர் அமைத்து கான்கிரீட் கலவைகள் மூலம் சீரமைக்க வேண்டும் அல்லது வேறொரு இடத்திற்கு போலீஸ் நிலையத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என தவிட்டுப்பாளையம் பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீசார் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story