மகப்பேறு டாக்டர் பணியிடம் நிரப்பப்படுமா?


மகப்பேறு டாக்டர் பணியிடம் நிரப்பப்படுமா?
x
தினத்தந்தி 7 Oct 2023 7:45 PM GMT (Updated: 7 Oct 2023 7:45 PM GMT)

கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டர் பணியிடம் நிரப்பப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்
கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டர் பணியிடம் நிரப்பப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.


அரசு ஆஸ்பத்திரி

கிணத்துக்கடவில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு அவசர சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைகள் நலம், காது, மூக்கு மற்றும் தொண்டை சிகிச்சை, பிரசவ முன் கவனிப்பு, பிரசவ பின் கவனிப்பு, சித்த மருத்துவம், குடும்ப நலம், கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி, ஸ்கேன், தொற்றா நோய் சிகிச்சை, இ.சி.ஜி. பரிசோதனை ஆய்வகம், எக்ஸ்ரே, இயன்முறை மருத்துவம் உள்பட 15 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் 6 டாக்டர்கள், 4 செவிலியர்கள், ஒரு செவிலியர் கண்காணிப்பாளர் உள்பட 26 மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். ஆனாலும், ஒரு டாக்டர் உள்பட 4 மருத்துவ பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. எனினும், தினமும் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

மகப்பேறு டாக்டர்

இந்த நிலையில் கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த மகப்பேறு டாக்டர், வேறு ஆஸ்பத்திரிக்கு பணியிட மாறுதல் பெற்று சென்றார். ஆனால் 6 மாதங்களை கடந்தும் புதிய மகப்பேறு டாக்டர் நியமிக்கப்படவில்லை. இதனால் கர்ப்பிணிகளுக்கான உடல் பரிசோதனை மட்டும் நடைபெறுகிறது. ஆனால் பிரசவம் பார்க்கப்படுவது இல்லை. இதனால் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கர்ப்பிணிகளை அனுப்பி வைக்கும் நிலை உள்ளது.

நடவடிக்கை

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் அரசு ஆஸ்பத்திரியையே நம்பி உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக வெளியிடங்களுக்கு செல்லும்போது, வீண் அலைச்சலை சந்திக்க நேரிடுகிறது. தற்போது மகப்பேறு டாக்டர் இல்லாததால், கர்ப்பிணிகள் அந்த அலைச்சலை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மகப்பேறு டாக்டர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Next Story