பருப்பு விலை உயரும்?


பருப்பு விலை உயரும்?
x

சாகுபடி பரப்பு குறைவு காரணமாக பருப்பு வகைகளில் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வணிக வட்டாரத்தினர் கூறினர்

விருதுநகர்


சாகுபடி பரப்பு குறைவு காரணமாக பருப்பு வகைகளில் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வணிக வட்டாரத்தினர் கூறினர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக தேசிய அளவில் தக்காளி, காய்கறி வகைகள், வெங்காயம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ள நிலையில் சில்லறை பணவீக்கம் கடந்த 15 மாதங்களில் இல்லாத வகையில் 7.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் முக்கிய உணவுப்பொருளான அரிசி, கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பிட்ட அரிசி ரக ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த இந்திய உணவுக்கழகம் மூலம் வெளிச்சந்தையில் 40 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து 2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தநிலையில் இதுவரை இல்லாத வகையில் ஆகஸ்டு மாதம் விதைப்பு காலத்தில் 40 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ள நிலையில் பருப்பு வகைகளின் சாகுபடி பரப்பு கிட்டத்தட்ட 149.5 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது. மேலும் பருப்பு வகைகளின் விலைகள் கடந்த ஜூன் மாதத்தில் 10 சதவீதமும். ஜூலை மாதம் 13.3சதவீதமும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் அரிசி சாகுபடி பரப்பு 1.3 சதவீதமும், சிறுதானிய சாகுபடி பரப்பு 4.3 சதவீதமும் உயர்ந்துள்ள நிலையில் பருப்பு வகைகளின் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது. எனவே அடுத்து வரும் நாட்களில் பருப்பு வகைகளின் விலைகள் உயர்வதற்கு வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. இதன் மூலம் பணவீக்கமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story