ரங்கம்பாளையம் ஓடை தூர்வாரப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ரங்கம்பாளையம் ஓடை தூர்வாரப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட ரங்கம்பாளையம் ஓடை தூர்வாரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஈரோடு

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட ரங்கம்பாளையம் ஓடை தூர்வாரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ரங்கம்பாளையம் ஓடை

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் ஒன்றாக ரங்கம்பாளையம் உள்ளது. இந்த வழியாக செல்லும் ஓடை ரங்கம்பாளையம் ஓடையாகும். பல்வேறு சிறு ஓடைகள் சேர்ந்து ரங்கம்பாளையத்தில் ஒரே ஓடையாக மாறி டாக்டர் ஆர்.ஏ.என்.எம். கல்லூரி நுழைவுவாயில் வழியாக, ரங்கம்பாளையம் முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள் வழியாக காசிபாளையம் பெரும்பள்ளம் ஓடையில் வந்து கலக்கிறது.

இந்த ஓடை தற்போது கழிவு நீர் ஓடையாக மாறி விட்டது. பொதுமக்கள் தங்கள் வீட்டு குப்பைகளை கொண்டு போடும் இடமாக உள்ளது. குடியிருப்பு பகுதி கழிவுகளும் வந்து கலந்து ரங்கம்பாளையம் ஓடை துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நாணல் புல் உள்பட பல்வேறு களைச்செடிகளும் வளர்ந்து உள்ளது. இதனால் குப்பைகள் தேங்கி, தண்ணீர் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு ஆங்காங்கே தேங்கிக்கிடக்கிறது.

கோரிக்கை

எனவே ரங்கம்பாளையம் ஓடையை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த அசோகன் என்பவர் கூறியதாவது:-

ரங்கம்பாளையம் ஓடை நீண்ட காலத்துக்கு முன்பு நல்ல தண்ணீர் செல்லும் ஓடையாக இருந்தது. இப்போது சாக்கடை ஓடையாக மாறிவிட்டது. கடந்த ஆண்டு இதுபோல் அதிக அளவில் புதர் மண்டிக்கிடந்தது. அப்போது ஒரு பெரு மழை பெய்தபோது, புதர்களில் தண்ணீர் தடுக்கப்பட்டு முத்தம்பாளையம் பகுதி-7 குடியிருப்பு சாலையை தாண்டி வெள்ளம் சென்றது. அதுபோல தற்போதைய மழையிலும் தண்ணீர் பாலத்தை தொட்டுக்கொண்டு ஓடியது. இனி வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை வரும்போது ஓடையில் வெள்ளம் செல்ல முடியாத அளவு புதர்கள் மண்டிக்கிடக்கிறது. எனவே இந்த புதரை அகற்றி, ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story