நூல் விலை ஏற்றம் எதிரொலியாக ஜெர்மனியில் நடைபெறும் ஜவுளி கண்காட்சியில் உரிய ஆர்டர்கள் கிடைக்குமா?


நூல் விலை ஏற்றம் எதிரொலியாக ஜெர்மனியில் நடைபெறும் ஜவுளி கண்காட்சியில் உரிய ஆர்டர்கள் கிடைக்குமா?
x

நூல் விலை ஏற்றம் எதிரொலியாக ஜெர்மனியில் நடைபெறும் ஜவுளி கண்காட்சியில் உரிய ஆர்டர்கள் கிடைக்குமா? என கரூர் ஏற்றுமதியாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கரூர்

கரூர்,

ஜவுளி கண்காட்சி

ஜெர்மனி பிராங்க்பர்ட்நகரில் ஆண்டுதோறும் உலக அளவிலான ஜவுளி கண்காட்சி ஜனவரி மாதம் 11-ந் தேதி தொடங்கி 14-ந்ேததி வரை 4 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இவ்வாறு நடைபெறும் ஜவுளி கண்காட்சியில் உலக நாடுகளில் இருந்து ஏற்றுமதியாளர்கள் பலர் சென்று கலந்து கொண்டு புதிய ஆர்டர்களை எடுத்து வருவது வழக்கம். இந்நிலையில் 2 இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஜவுளி கண்காட்சி நடைபெற வில்லை. இந்த ஆண்டு வரும் 21-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 4 நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.

தீவிரம் காட்டி வந்தனர்

அதன் அடிப்படையில் புதிய சாம்பிள்களை தயாரித்து கண்காட்சியில் வைத்து அதன் மூலம் ஆர்டர்களை பெற வேண்டும் என்ற வகையில் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பல ஏற்றுமதியாளர்கள் அதற்கான டிசைன்களை சாம்பில் தயார் செய்து அனுப்பி வைத்தும், கண்காட்சியில் அரங்குகள் அமைக்க தேவையான இடங்களை வாடகைக்கு பிடிப்பது உள்ளிட்ட வேலைகளில் தீவிரம் காட்டி வந்தனர்.

மேலும் அங்கு அரங்கில் இருந்து பணியாற்றவும், பிற நாட்டினர் அமைத்திருக்கும் அரங்குகளை பார்வையிடவும், புதிய வாடிக்கையாளர்களை அடையாளம் காணவும் அங்கு செல்வதற்கான விமான டிக்கெட் புக்கிங் செய்து, அங்கு தங்குவது உள்ளிட்டவைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தயார் செய்து வருகின்றனர்.

30 பேர் மட்டுமே செல்கின்றனர்

கடந்த சில மாதங்களாக நூல் விலை ஏற்றம் தொடர்ந்து அதிகரித்து 100 சதவீதம் அளவிற்கு விலை ஏறி உள்ளது. இந்தநிலையில் ஜெர்மனியில் நடைபெறும் கண்காட்சியில் உரிய ஆர்டர்களை எடுக்க முடியுமா? இறக்குமதியாளர்கள் வரவேற்பு எவ்வாறு இருக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த காலங்களில் கரூரில் இருந்து மட்டும் 60 முதல் 70 ஏற்றுமதியாளர்கள் கண்காட்சியில் கலந்து கொண்டு புதிய ஆர்டர்களை பெற்று வந்தனர். இம்மாதம் நடைபெறும் கண்காட்சியில் கலந்து கொள்ள கரூர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 30 பேர் மட்டுமே செல்ல உள்ளனர்.

சிக்கல்

இதுகுறித்து கரூரை சேர்ந்த முன்னணி ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகி ஸ்டீபன்பாபு கூறுகையில், ஆண்டுதோறும் ஜெர்மனியில் நடைபெறும் ஜவுளி கண்காட்சியில் கரூர், ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏற்றுமதியாளர்கள் சென்று கலந்துகொண்டு புதிய ஆர்டர்களை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் நாட்டின் அன்னியச் செலாவணி அதிகரிப்பதுடன் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிக அளவில் கிடைத்து வந்தது. கடந்த சில மாதங்களாக நூல் விலை தொடர்ந்து ஏறி வந்ததன் விளைவாக ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களை முடித்து அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கண்காட்சிக்கு சென்றால் தெரியும்

தற்போது நூல் விலை ஏற்றத்தால் சுமார் ரூ.1,500 கோடி அளவிற்கு தொழில் பாதிப்படைந்து உள்ளது. இந்நிலையில் கண்காட்சியில் இறக்குமதியாளர்கள் புதிய விலையை ஏற்பார்களா? அதிக அளவில் ஆர்டர்களை பெற முடியுமா? உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இருப்பினும் கண்காட்சிக்கு சென்று கலந்து கொண்ட பின்புதான் அதன் விளைவுகள் குறித்து முழுமையாக தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story