பல்லாங்குழியாக மாறிய சாலை சீரமைக்கப்படுமா
கள்ளக்குறிச்சி குளத்துமேட்டுத்தெருவில் பல்லாங்குழியாக மாறிய சாலை சீரமைக்கப்படுமா
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நகரத்தில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வரும் பிரதான சாலையாக குளத்து மேட்டுத்தெரு சாலை உள்ளது. இந்த தெரு வழியாகத்தான் கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட், கடைவீதி மற்றும் மளிகை கடைகளுக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் வந்து செல்வதால் மிகவும் பரபரப்புடன் காணப்படும்.
குளத்துமேட்டுத்தெரு சாலையானது கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் போடப்பட்டது. ஆனால் தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
வீண்செலவு
மழைக்காலங்களில் பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பது தெரியாமல் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்துள்ளனர். கார், லாரி, மினி லாரி போன்ற வாகனங்களின் சக்கரங்கள் பள்ளத்தில் சிக்கி பின்னர் அதில் இருந்து மீண்டு வருவதற்குள் ஒரு வழியாகி விடுகிறது. இதனால் வீண் செலவு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.
எனவே போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியமாக இருக்கும் நகரின் பிரதான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகள் கோாிக்கைவிடுத்து வருகின்றனர்.
நடவடிக்கை இல்லை
இது குறித்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த சுந்தர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சியில் பிரதான சாலையாக விளங்கிவரும் குளத்து மேட்டுத்தெரு சாலை குண்டும் குழியுமாக மாறி பல்லாங்குழி சாலையாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் இந்த சாலையில் சென்று வர மிகவும் அல்லல்படுகின்றனர். இது குறித்து நகராட்சி அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டு வீடுகள் இருக்கும் தெருக்களில் எல்லாம் சாலைகள் போடப்பட்டு வரும் நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லக்கூடிய குளத்து மேட்டுத்தெரு சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் அக்கறை காட்டாமல் இருப்பது வேதனையாக உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைப்பதற்கு மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
10 ஆண்டுகளாக
கள்ளக்குறிச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன்:-
குளத்து மேட்டுத்தெருவில் மளிகை கடை, எலக்ட்ரிக்கல் கடை, நகை அடகு கடை, பேக்கரி, பாத்திரக்கடை என 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள் நகராட்சிக்கு வருடத்திற்கு பல லட்சம் ரூபாய் வரி செலுத்தி வருகின்றனர். மேலும் கிராமப்பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த சாலை வழியாகத்தான் மார்க்கெட், காய்கறி உள்ளிட்ட கடைகளுக்கு வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படும். ஆனால் தற்போது குளத்துமேட்டுத்தெரு சாலை குண்டும், குழியமாக மாறி இருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வந்து செல்ல சிரமப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த வேதனையை அனுபவித்து வருகிறார்கள். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மேடைக்கு மேடை பேசி வருகிறார்கள். ஆனால் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையெலலாம் பார்க்கும்போது ஊருக்குத்தான் உபதேசமா? என்று நினைக்க தொன்றுகிறது. எனவே பாதசாரிகள், வாகன ஓட்டிகளின் மனவேதனையை உணர்ந்து சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.