வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் நிழற்குடை அமைக்கப்படுமா?


வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் நிழற்குடை அமைக்கப்படுமா?
x

வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் நிழற்குடை இல்லாமல் வெயில், மழையால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

கரூர்

பயணிகள் நிழற்குடை

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே கரூர் சாலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை இருந்தது. நாளடைவில் அந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும்போது, பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலை விரிவாக்க பணி முடிந்தவுடன் நிழற்குடை அமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சாலைபணிகள் முடிந்து பல ஆண்டுகளாகியும் இதுவரை நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழையால் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் வயதான முதியவர்கள் அப்பகுதியில் உள்ள கடை மற்றும் பெரிய கட்டிடங்கள் முன்பு நின்று பஸ்சில் ஏறி செல்கின்றனர்.

கோரிக்கை

தற்போது பேரூராட்சி நிர்வாகம், தாலுகாவில் இருந்து நகராட்சி நிர்வாகமாக உயர்ந்து விட்டது. ஆனால் பயணிகள் நிழற்குடை இல்லாதது பெரும் குறையாக உள்ளது. வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் இருந்து கரூர், வேலூர், கொடுமுடி ஆகிய ஊர்களுக்கு அரைமணி நேரத்திற்கு ஒரு முறை தனியார், அரசு நகர பஸ்கள் அளவில் இயக்கப்பட்டு வருகிறது. எனவே உடனடியாக இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கருத்து

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்:-

நான் இந்த பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறேன். தையல் வேலை விஷயமாக துணிகளுக்கு காஜா போடுவதற்காக அடிக்கடி பரமத்தி வேலூர் செல்ல வேண்டியுள்ளது. அப்போது மழைபெய்ய தொடங்கி விட்டால், அங்கு செல்வதை நிறுத்திக்கொள்வேன். ஆனால் வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் நிழற்குடை இருந்தால் அங்கு சென்று நிழற்குடையில் நின்று பஸ்சில் செல்வதற்கு வசதியாக இருக்கும்.

முகம் சுழிக்கின்றனர்

வேலாயுதம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த ராஜு:-

கரூர், கொடுமுடி, வேலூர் என்று அடிக்கடி கூலி வேலைக்கு வேலாயுதம்பாளையத்தில் இருந்து சென்று வருவது வழக்கம். பஸ்சுக்கு செல்லும்போது ஓடி பிடித்து ஏற வேண்டியுள்ளது. அடுத்த பஸ்சுக்காக காத்துயிருக்க வேண்டியுள்ளது. அதுவரை அப்பகுதியில் உள்ள டீக்கடையில் நின்றால் அங்குள்ளவர்கள் முகம் சுழிக்கின்றனர். அதனால் வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் நிழற்குடை இருந்தால் நன்றாக இருக்கும்.

போக்குவரத்து நெரிசல்

வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவி:-

வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் முன்பு பயணிகள் நிழற்குடை இருந்தது. தற்போது நிழற்குடை இல்லாமல் வெயில், மழை என்று நனைந்தாவாறு சாலையிலே பஸ்க்காக காத்து இருப்பது பரிதாபமாக உள்ளது. தற்போது அந்த பகுதியில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை அதிக வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடும் அவதி

வேலாயுதம்பாளையத்தை ேசர்ந்த செந்தில்குமார்:-

ேவலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் பயணிகள் நிழற்குடை என்பது மிக, மிக தேவையான விஷயம். தினமும் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் நீண்ட நேரம் வெயிலில் நிற்கின்றனர். மேலும் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து ெநரிசல் ஏற்படுவதால், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை அமைத்து பொதுமக்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story