சேறு நிறைந்த சோத்துப்பாறை அணை தூர்வாரப்படுமா?


சேறு நிறைந்த சோத்துப்பாறை அணை தூர்வாரப்படுமா?
x
தினத்தந்தி 5 Oct 2022 7:30 PM GMT (Updated: 5 Oct 2022 7:30 PM GMT)

பெரியகுளம் அருகே சேறு நிறைந்த சோத்துப்பாறை அணையை தூர்வாரி விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தேனி


சோத்துப்பாறை அணை


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இந்த அணை, கடந்த 2001-ம் ஆண்டு திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த அணையின் மொத்த உயரம் 126.28 அடி.


தமிழகத்தில் 2-வது உயரமான அணை என்ற சிறப்பை இந்த அணை பெற்றுள்ளது. ஆனால், உயரம் மட்டுமே அதிகம். கொள்ளளவு வெறும் 100 மில்லியன் கன அடி தான். பெரிய அளவிலான ஒரு குளத்தில் தேங்கும் அளவுக்கு தான் அந்த அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.


அணை என்பதை விட பெரியகுளம் என்ற அளவில் தான் பயன்பாடும் உள்ளது. தொடர்ந்து சில நாட்கள் பலத்த மழை பெய்தால் அணை நிரம்பி விடும். நீர்வரத்து நின்று விட்டால், அணையின் நீர்இருப்பு வேகமாக குறைந்து விடும்.


பாசன பரப்பு


2 மலைகளுக்கு இடையே ஓடிவரும் வராகநதியின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய நீர் ஆதாரமாக கொடைக்கானல் பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி திகழ்கிறது. பேரிஜம் ஏரியில் இருந்தும், கொடைக்கானல் பகுதிகளில் மழை பெய்யும் போதும் இந்த அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.


இந்த அணைக்கட்டின் மொத்த நீளம் 345 மீட்டர் ஆகும். நீர்வரத்தின் பரப்பளவு 38.40 சதுர கிலோமீட்டர். அணையின் மூலம் சுமார் 1,825 ஏக்கர் நன்செய் நிலங்களும், 1,040 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. அதுதவிர, பெரியகுளம் பகுதியை சேர்ந்த மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை திகழ்கிறது.


பெரிய 'குளம்'


அணை என்ற போதிலும் இதன் நீர்ப்பிடிப்பு பகுதி சமநிலையற்றதாக உள்ளது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை என்ற போதிலும், இன்னும் ஆறு போன்றே அணையின் உட்பகுதியும் காட்சி அளிக்கிறது. அணைக்குள் பெரிய அளவிலான மேடுகள், மண் திட்டுகளாக காட்சி அளிக்கிறது. அணை கட்டுமான பணியின் போது தோண்டப்பட்ட மண், பாறைகளை முழுமையாக அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.


இந்த மேடுகளை கரைத்தால் அணைக்குள் இன்னும் கூடுதல் அளவில் தண்ணீர் தேக்கி வைக்கலாம். தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள மேடுகளை தூர்வாரி, அணைக்குள் கிடக்கும் வண்டல் மண்ணை அப்புறப்படுத்தினால், அணையில் சுமார் 200 மில்லியன் கன அடி அளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்று கூறப்படுகிறது. இது, தற்போதைய மொத்த கொள்ளளவை காட்டிலும் இரு மடங்கு ஆகும்.


விவசாயிகள் எதிர்பார்ப்பு


சேறும், சகதியும் நிறைந்த இந்த அணையை தூர்வார வேண்டும் என்றும், அணைக்குள் உள்ள மேடுகளை அகற்ற வேண்டும் என்றும் விவசாயிகளும், பொதுமக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசுக்கு இதுதொடர்பாக விவசாயிகள் பல முறை கோரிக்கை மனுக்கள் அளித்து உள்ளனர். அணை எப்போது தூர்வாரப்படும்? என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.


இதுதொடர்பாக பெரியகுளத்தை சேர்ந்த விவசாயி வெற்றிவேல் கூறுகையில், "அணை கட்டும் போது பெரியகுளம் பகுதியில் 3 போகம் நெல் விளையும் என்றார்கள். ஆனால், ஒரு போகம் விளைச்சல் அடையவே தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அணையை தூர்வாரி நீர் தேங்கும் பரப்பளவை இன்னும் விரிவுபடுத்த வேண்டும். அணையில் தற்போது அதிக அளவில் மண் படிந்துள்ளது. இதனால், கோடை காலங்களில் சேறும், சகதியுமாக மாறி குடிநீரில் துர்நாற்றம் வீசும் நிலை உருவாகிறது" என்றார்.


பெரியகுளத்தை சேர்ந்த விவசாயி ராஜா கூறுகையில், "2 நாட்கள் பலத்த மழை பெய்தால் நிரம்பும் நிலையில் தான் அணை உள்ளது. ஒரு குளம் கொடுக்கும் பயனை தான் அணையின் மூலம் பெற முடிகிறது. அணையை தூர்வார வேண்டும். மேலும் இந்த அணையில் படகு சவாரி தொடங்கி சுற்றுலா மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ளலாம்" என்றார்.


தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் கூறுகையில், "இந்த அணையை தூர்வாரி ஆழப்படுத்தக்கோரி பல முறை மனு கொடுத்துள்ளோம். தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு அணை நிரம்பி பல நாட்கள் உபரிநீர் வீணாக ஓடியது. தூர்வாரினால் 2 போகம் நெல் சாகுபடியை தாராளமாக மேற்கொள்ளலாம். தற்போதைய கொள்ளளவை விட அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைக்கலாம்" என்றார்.



Next Story