கிடப்பில் போடப்பட்ட சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?
மேல லட்சுமணபட்டியில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கிடப்பில் போடப்பட்ட சாலை
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மேல லட்சுமணபட்டி தெற்கு களம் பகுதியில் வசிக்கும் மக்கள் சரியான சாலை வசதி இல்லாமல், மண் சாலையில் வாகனங்களில் மிகுந்த சிரமத்துடன் சென்று வந்தனர். மேலும் இந்த மண் சாலையானது மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறி வாகனங்கள் முற்றிலும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இப்பகுதி மக்கள் இந்த மண் சாலையை தரமான தார் சாலையாக மாற்றி தர அரசுக்கு தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற அரசு தார்சாலைக்கு பதிலாக, தொடக்க பள்ளியிலிருந்து தெற்கு களம் வரை பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியை தொடங்கியது. அதன்படி சாலையின் மண் சமன்படுத்தப்பட்டு, இருபுறமும் சிமெண்டு கட்டை கட்டப்பட்டு, அதன் உட்புறம் ஜல்லி கற்கள் கொட்டி சாலை பணிகள் நடைபெற்றன.
கோரிக்கை
இதன்பின் கடந்த 6 மாத காலமாக மேற்கொண்டு எந்த பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஜல்லி கற்கள் மேல் வாகனங்களில் செல்லமுடியாமலும், நடந்து செல்ல முடியாமலும் தெற்கு களம் பகுதியில் வசிக்கும் மக்களும், அந்த பகுதி விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளும் மிகுந்த சிரமத்தை தற்போது சந்தித்து வருகின்றனர்.
எதனால் இந்த சாலை பணி முழுமை பெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இச்சாலை பணியை விரைந்து தொடங்கி, பேவர் பிளாக் பதித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.