தென்னந்தட்டி பிண்ணும் தொழிலுக்கு தமிழக அரசு மானியம் வழங்குமா?

செலவினங்கள் அதிகரிப்பால் வருமானம் குறைந்துவிட்ட காரணத்தால் தென்னந்தட்டி பிண்ணும் தொழிலுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனைமலை
செலவினங்கள் அதிகரிப்பால் வருமானம் குறைந்துவிட்ட காரணத்தால் தென்னந்தட்டி பிண்ணும் தொழிலுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தென்னந்தட்டி தயாரிப்பு
பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 23 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக தென்னை மரத்தில் இருந்து விழும் காய்ந்த ஓலைகளை சீமார், தட்டி தயாரிக்க பயன்படுத்தி வருகின்றனர். இதில் தென்னந்தட்டி தயாரிக்கும் தொழிலை நம்பி ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பத்தினர் உள்ளனர். இவர்கள் காய்ந்த தென்னை ஓலைகளை தட்டியாக பிண்ணி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், சீர்காழி, சிதம்பரம், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர். இது தவிர அண்டை மாநிலமான கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
நலிவடைந்தது
இந்த நிலையில் தென்னந்தட்டி பிண்ணும் தொழிலாளர்கள் போதிய வருமானம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வேறு தொழிலை தேடி செல்லும் நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த தொழில் நலிவடைந்து வருகிறது. இதுகுறித்து வேட்டைக்காரன்புதூர் பகுதியில் குடிசை தொழிலாக தென்னந்தட்டி பிண்ணும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் கூறியதாவது:-
வீட்டின் மேற்கூரை அமைத்தல், கோழிப்பண்ணை அமைத்தல், தேயிலை எஸ்டேட்டுகளில் ஷெட் அமைத்தல், சுப மற்றும் துக்க நிழ்ச்சிகளுக்கு பந்தல் அமைத்தல் போன்ற தேவைகளுக்கு தென்னந்தட்டிகளை பயன்படுத்தி வந்தனர்.
மானியம் வேண்டும்
தற்போது மேற்கூரைக்கு சிமெண்டு ஷீட், பந்தல் அமைக்க துணி ஆகியவற்றை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் எங்கள் தொழில் நலிவடைந்து வருகிறது. 1½ அடி அகலமும், 7 அடி நீளமும் கொண்ட 25 தென்னந்தட்டிகள் கொண்ட ஒரு கட்டு, மழைக்காலங்களில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோடைகாலத்தில் ரூ.130-க்கு விற்பனையாகிறது. இதற்கு 200 முதல் 300 வரை எண்ணிக்கை கொண்ட தென்னை ஓலையை ரூ.300-க்கு வாங்க வேண்டியுள்ளது.
ஒரு நாளைக்கு 7 கட்டு தென்னந்தட்டி மட்டுமே தயாரிக்க முடிகிறது. அதற்கு ஒரு கட்டுக்கு ஆட்கள் கூலி ரூ.30 முதல் ரூ.40 வரை கொடுக்க வேண்டியுள்ளது. இது தவிர ஓலையை வாகனத்தில் எடுத்து வருவது உள்ளிட்ட செலவினங்களும் ஏற்படுகிறது. இதனால் ஒரு நாளைக்கு ரூ.210 மட்டுமே வருமானம் கிடைக்கிறது. இதை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. இதனால் பலரும் வேறு தொழிலை நாடி சென்றுவிட்டனர். எனவே தமிழக அரசு மானியம் வழங்கி உதவ முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.