உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் பாய்க்காரத்தெரு பாலம் எதிரே உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் பாய்க்காரத்தெரு பாலம் எதிரே உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
பாய்க்காரத்தெரு பாலம்
கூத்தாநல்லூர்-வடபாதிமங்கலம் சாலையில் உள்ளது பாய்க்காரத்தெரு பாலம். இந்த பாய்க்காரத்தெரு பாலம் அமைந்துள்ள இடம் மரக்கடை சாலை, லெட்சுமாங்குடி சாலை, வடபாதிமங்கலம் சாலை என மூன்று பிரிவு சாலைகளை மையமாக கொண்டுள்ளது. இதனால் இந்த சாலைகளில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.
இந்த நிலையில் இரவு நேரங்களில் பாய்க்காரத்தெரு பாலம் மட்டும் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலை பகுதியில் நடந்து செல்லக்கூடிய அப்பகுதி மக்கள் இருள் சூழ்ந்த பகுதியில் செல்லும்போது ஒரு வித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
இருள்சூழ்ந்து...
மேலும் இருள் சூழ்ந்த பகுதி போல காணப்படுவதால் மது அருந்துபவர்கள் மற்றும் வழிப்பறி கொள்ளையர்கள் அந்த பாய்க்கார தெரு பாலத்தின் நடைபாதையில் கூட்டமாக நிற்கின்றனர். இதனால் இரவு 7 மணிக்கு டியூசன் படித்து விட்டு வீடு திரும்பக்கூடிய பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் பாய்க்காரத்தெரு பாலத்தை கடந்து சென்று வருவதற்கு மிகவும் அச்சம் அடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அதேபோல் இருள் சூழ்ந்த பகுதியில் எதிர் எதிரே வரக்கூடிய வாகனங்களும் போதிய வெளிச்சம் இல்லாமல் வாகன ஓட்டிகள் சற்று நிலை தடுமாறுகின்றனர்.
உயர்கோபுர மின்விளக்கு
இதற்கு அந்த பாலத்தில் போதிய வெளிச்சம் இல்லாததே காரணமாக உள்ளது.
எனவே பாய்க்காரத்தெரு பாலம் எதிரே உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.