தேனி பழைய அரசுஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை பிரிவு தொடங்கப்படுமா?


தேனி பழைய அரசுஆஸ்பத்திரியில்  மீண்டும் சிகிச்சை பிரிவு தொடங்கப்படுமா?
x
தினத்தந்தி 23 Nov 2022 7:00 PM GMT (Updated: 23 Nov 2022 7:00 PM GMT)

தேனி பழைய அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை பிரிவுகள் தொடங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேனி

பழைய அரசு ஆஸ்பத்திரி

தேனி சமதர்மபுரத்தில் பழைய அரசு ஆஸ்பத்திரி உள்ளது. என்.ஆர்.டி. நினைவு அரசு ஆஸ்பத்திரி என்ற பெயரில் பல ஆண்டுகளாக இது செயல்பட்டு வந்தது. 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆஸ்பத்திரி, இ.சி.ஜி., எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனை வசதி, 200 படுக்கை வசதிகள், பிரசவ சிகிச்சை பிரிவு, தாய்சேய் நல பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு, பிணவறை போன்ற வசதிகளுடன் செயல்பட்டது. 10 கட்டிடங்கள் கொண்ட வளாகமாக இது உள்ளது. இதே பகுதியில் டாக்டர்கள், நர்சுகளுக்கான குடியிருப்புகளும் அமைக்கப்பட்டன.

பல ஆண்டுகளாக தேனி மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தேனியின் வளர்ச்சிக்கு பல்வேறு பங்காற்றிய முன்னாள் எம்.எல்.ஏ. என்.ஆர்.தியாகராஜன் நினைவாக இந்த அரசு ஆஸ்பத்திரிக்கு அவருடைய பெயரை அரசு சூட்டியது. தேனி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு இரவு, பகலாக மருத்துவ சேவை அளித்து வந்த இந்த அரசு ஆஸ்பத்திரி கடந்த 2004-ம் ஆண்டு கால கட்டத்தில் மூடப்பட்டது.

தலையாய பிரச்சினை

ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கில் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி 2004-ம் ஆண்டு திறக்கப்பட்டதால், அங்கு நோயாளிகள் அதிக அளவில் சென்றனர். இதனால், பழைய அரசு ஆஸ்பத்திரி மூடப்பட்டது.

மீண்டும் இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இந்நிலையில் இந்த கட்டிடம் சேதம் அடைந்து பாழடைந்து காணப்பட்டது. பின்னர் அரசு நிதி ஒதுக்கீடு செய்து இந்த கட்டிடத்தை புதுப்பித்தது. புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தில் மீண்டும் அரசு ஆஸ்பத்திரி தொடங்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஆஸ்பத்திரி தொடங்கவில்லை. தலைநகரில் அரசு ஆஸ்பத்திரி இல்லை என்பதும் தலையாய பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

அரசு நிதியில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் காட்சிப் பொருளாக இருந்ததால், இங்கு அரசு மனநல மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. தற்போது இந்த மையம் மட்டும் இந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. 17 ஆண்டுகளுக்கு முன்பு 24 மணி நேரமும் பரபரப்பாக காட்சி அளித்த இந்த கட்டிடம் தற்போது வெறிச்சோடியே காணப்படுகிறது.

இந்த பழைய அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை பிரிவுகள் தொடங்கி, மக்களின் முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பலதரப்பட்ட மக்களும் கருத்து தெரிவித்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

உயிரிழப்புகளை தவிர்க்கலாம்

முருகேசன் (முன்னாள் நகர்மன்ற தலைவர், தேனி) :- தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரி இது. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால் மக்கள் எளிதில் வந்து செல்ல முடிந்தது. அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி பயன்பாட்டுக்கு வந்த பிறகு இது பயன்படுத்தப்படாமல் போனது. தற்போது தேனியை சேர்ந்த மக்கள் காய்ச்சல், வயிற்றுப் போக்கு வந்தால் கூட க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டியது உள்ளது. அல்லது தேனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல வேண்டும். ஏழை, எளிய மக்கள் பயன்பெற இந்த ஆஸ்பத்திரியில் தேவையான சிகிச்சை பிரிவுகளை தொடங்கி மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

ஜெகதீசன் (ஆம்புலன்ஸ் பணியாளர், தேனி) :- தேனியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சிறிய காயங்கள் ஏற்பட்டால் க.விலக்கு செல்ல வேண்டியது உள்ளது. 5 நிமிட சிகிச்சை தேவைப்பட்டாலும் 12 கிலோமீட்டர் அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிக அளவில் நடந்தன. மண்எண்ணெய் மட்டும் ஊற்றிக்கொண்ட நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவும், பாம்பு கடிபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் க.விலக்கு செல்ல வேண்டியது உள்ளது. இந்த பழைய அரசு ஆஸ்பத்திரியில் விபத்து சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, பிரசவ சிகிச்சை பிரிவு, பாம்பு கடி சிகிச்சை பிரிவு போன்றவை தொடங்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தாமதமின்றி சிகிச்சை பெற்று உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.

12 கி.மீ. பயணம்

விக்னேஷ்பாபு (சமூக ஆர்வலர், தேனி) :- எல்லா மாவட்ட தலைநகரிலும் அரசு ஆஸ்பத்திரி இருக்கும். ஆனால், தேனியில் மட்டும் அரசு ஆஸ்பத்திரி இல்லை. செயல்பட்டு வந்த ஆஸ்பத்திரியும் முடங்கிக் கிடக்கிறது. ஏழை, எளிய மக்கள் 12 கிலோமீட்டர் பயணம் செய்து அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றாலும் அங்கு கூட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற காலையில் சென்றாலும் திரும்பி வருவதற்கு பிற்பகல் ஆகிவிடுகிறது. எனவே, இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க தேனி பழைய அரசு ஆஸ்பத்திரியை மீண்டும் முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story