பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?


ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. இங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. இங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

பாதாள சாக்கடை

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன. ஆதலால் இங்கு தினமும் எண்ணற்ற மக்களும், வாகனங்களும் வந்து செல்கின்றன.

இந்த பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் மிகவும் ெமதுவாக நடைபெற்று வருகிறது. 42 வார்டுகளிலும் பாதி பணிகள் தான் நிறைவு பெற்றுள்ளது. பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் நடக்க முடியாத நிலை உள்ளதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒரு சில பகுதிகளில் தற்காலிகமாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகளுக்காக பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு சரி செய்யப்படாமல் உள்ளது.

போக்குவரத்து நெரிசல்

இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. எனவே பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிந்து புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கருத்து

பாதாள சாக்கடை பணிகள் குறித்து தேவகி கூறியதாவது:-

ராஜபாளையம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் இன்றும் முழுமை பெறாமல் உள்ளது. இதனால் தெருக்களில் கூட நடந்து செல்ல முடியாத நிலை நிலவுகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

டைகர் சம்சுதீன்:- பாதாள சாக்கடை பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. சாலைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாறிவிட்டது. எனவே இந்த பணிகளை விரைந்து முடித்து புதிய சாலை அமைக்க வேண்டும்

கதிர்வேல்:- ராஜபாளையம் பகுதியில் முறையாக மாற்றுப்பாதை ஏற்படுத்தாமல் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்பட்டன. மழை பெய்தால் நடக்க கூட முடியாத அளவிற்கு சாலைகள் மாறிவிடுகிறது எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

வருகிற மார்ச் மாதம் நிறைவு பெறும்

- எம்.எல்.ஏ. தகவல்

பாதாள சாக்கடை பணிகள் குறித்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:- ராஜபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் வீட்டில் உள்ள கழிவுநீர் செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் செப்டிக் டேங்க் மூலம் வெளியேற்றும் முறை இல்லாமல் நேரடியாகவே பாதாள சாக்கடை குழாய்க்கு சென்று விடும். இத்திட்ட பணிகள் 2023 மார்ச் மாதம் நிறைவடையும். இதில் 42 வார்டுகளிலும் தற்போது தெருக்களில் சாலைகள் போடுவதற்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.20 கோடி நிதி தமிழக அரசிடம் பெறப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவடையும் என்றார்.

99 சதவீத பணிகள் நிறைவு

நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி கூறியதாவது:-

ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணிகள் 99 சதவீதம் வரை முடிவடைந்துள்ளது. தென்காசி, சங்கரன்கோவில் முக்கு சாலையில் இணைப்பு பணிகள் மட்டுமே தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவுற்று விரைவில் முழுமையான பயன்பாட்டிற்கு வரும். மேலும் நகராட்சி 42 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்து விட்டது. தெருவில் உள்ள சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 மாதங்களில் சாலை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். .நகராட்சியை சுற்றி உள்ள கண்மாய்களில் சாக்கடை தண்ணீர் செல்வது தடுக்கப்படுவதால் விவசாயிகள் பயன்பெறுவர், விவசாய உற்பத்தி கூடும். மேலும் ஊருணிகள், கண்மாய்கள் பாதுகாக்கப்படும் என்றார்.


Next Story