ஆறுகளில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?


ஆறுகளில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 9 Sep 2023 7:00 PM GMT (Updated: 9 Sep 2023 7:01 PM GMT)

வேதாரண்யம் பகுதியில் ஆறுகளில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் ஆறுகளில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தண்ணீர் பற்றாக்குறை

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகமும் நெல் விளைவிக்கப்படுகிறது. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மூலமாக டெல்டா பகுதியில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதை பயன்படுத்தி நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கினர். தற்போது தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் குறுவை பயிரை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள்.

விவசாயிகள் கோரிக்கை

விவசாய தேவைக்கான தண்ணீர் தடையின்றி கிடைக்கவும், மழைக்காலங்களில் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் ஆறுகளை தூர்வாரி முறைப்படி பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி வழியாக சென்று கடலில் கலக்கும் வளவனாறு, முள்ளியாறு, அரிச்சந்திரா நதி, அடப்பாறு, மல்லியனாறு, நல்லாறு உள்ளிட்ட ஆறுகளிலும், சக்கிலியன் வாய்க்காலிலும் சரிவர தண்ணீர் செல்ல முடியாதபடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலங்களில் காவிரி டெல்டா பகுதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த இந்த வடிகால் ஆறுகள் பெரிதும் உதவி வருகின்றன. இவை தவிர திருத்துறைப்பூண்டி, வாய்மேடு, ஆதனூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று கடலில் கலக்கும் மிகப்பெரிய வடிகால் ஆறாக மானங்கொண்டான் ஆறு விளங்குகிறது. இதேபோல் முள்ளியாறும் முக்கிய பாசன ஆறாக விளங்குகிறது.

ஆகாயத்தாமரைகள்

இதில் தாணிக்கோட்டகம் சட்ரஸ் முதல் வாய்மேடு வரை உள்ள முள்ளியாற்றிலும், அதில் இருந்து பிரியும் மானங்கொண்டான் ஆற்றிலும் பல கி.மீ. தொலைவுக்கு தண்ணீரையே காண முடியாதபடி ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதேபோல மணக்காட்டான் வாய்க்கால், ராஜன் வாய்க்கால், பெரிய வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் புதர் மண்டி உள்ளது. வேதாரண்யம் பகுதியில் உள்ள வடிகால் ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் ஆகாயத்தாமரை செடிகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அடர்ந்து வளர்ந்துள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

ஆகாயத்தாமரை செடிகள், புதர்கள் மண்டி கிடப்பதால் வடகிழக்கு பருவமழைக்காலத்தில் மழைநீர் வடியாமல் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வடிகால் வாய்க்கால்கள், ஆறுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றவும், ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் தடையின்றி செல்லவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story