திருத்துறைப்பூண்டி முள்ளி ஆற்றில் ஆகாயதாமரைகள் அகற்றப்படுமா?


திருத்துறைப்பூண்டி முள்ளி ஆற்றில் ஆகாயதாமரைகள் அகற்றப்படுமா?
x

திருத்துறைப்பூண்டி முள்ளி ஆற்றில் ஆகாயதாமரைகள் அகற்றப்படுமா?

திருவாரூர்

மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பே திருத்துறைப்பூண்டி முள்ளி ஆற்றில் உள்ள ஆகாயதாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளி ஆறு

திருத்துறைப்பூண்டி பகுதியில் முக்கிய வாழ்வாதாரமாக திகழக்கூடியது முள்ளிஆறு. இந்த ஆறு மூலம் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கல்லணை கால்வாய்க்கு வரும். பின்னர் அங்கிருந்து பிரிவு வாய்க்காலில் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

அதில் மன்னார்குடியில் இருந்து பிரியும் முள்ளி ஆறு முக்கியமானதாகும். இந்த முள்ளி ஆறு தட்டான் கோவில் பாலத்தில் இருந்து கோட்டூர், ராயநல்லூர், திருப்பத்தூர், விளக்குடி, மேட்டுப்பாளையம், பள்ளங்கோவில், கடியாச்சேரி, திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு, ஆதிரங்கம், வடபாதி, தென்பாதி, மேலமருதூர், தாணிக்கோட்டகம், வாய்மேடு வழியாக வேதாரண்யம் வரை பாசன வசதிக்காக செல்கிறது. இந்த ஆற்று தண்ணீரை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

ஆகாயதாமரைகள் அகற்றப்படுமா?

தற்போது முள்ளி ஆற்றில் ஆகாயதாமரைகள் அதிக அளவில் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் ஆற்றில் ஆகாயதாமரைகள் காணப்படுவதால் அந்த தண்ணீர் கடைமடை வரை செல்லாது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படும். எனவே மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பே முள்ளி ஆற்றில் உள்ள ஆகாயதாமரைகளை அகற்றி தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story