ஆலங்குளம் வழியாக கோவில்பட்டிக்கு அரசு பஸ் இயக்கப்படுமா?
ஆலங்குளம் வழியாக கோவில்பட்டிக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் வழியாக கோவில்பட்டிக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திடீர் நிறுத்தம்
ராஜபாளையத்தில் இருந்து ஆலங்குளம் வழியாக காலையிலும், மாலையிலும் கோவில்பட்டிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என அனைவரும் குறிப்பிட்ட ேநரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய முக்கிய நகரங்களுக்கு மத்தியில் ஆலங்குளம் அமைந்துள்ளது. ஆலங்குளத்தை சுற்றி எண்ணற்ற கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் ராஜபாளையத்தில் இருந்து ஆலங்குளம் வழியாக கோவில்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் எண்ணற்ற பேர் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் நடவடிக்கை
எனவே ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் இருந்து ஆலங்குளம் வழியாக கோவில்பட்டிக்கு அரசு பஸ் இயக்கினால் கீழராஜகுலராமன், காளவாசல், சாமிநாதபுரம், நல்லக்கம்மாள்புரம், தொம்ப குளம், கொங்கன்குளம், மேல பழையாபுரம், ஆலங்குளம், வலையபட்டி, ஏ.லட்சுமிபுரம், கண்மாய் பட்டி, சுண்டங்குளம், கீழாண்மறைநாடு, கோபாலபுரம், புளியடிபட்டி, கல்லமநாயக்கர்பட்டி, குண்டாயிருப்பு, முத்துசாமிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயன்பெறுவர்.
எனவே ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஆலங்குளம் வழியாக கோவில்பட்டிக்கு அரசு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.