வடபாதிமங்கலத்தில், புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்தப்படுமா?
வடபாதிமங்கலத்தில், புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்தப்படுமா?
25 ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் தேருக்கு பதிலாக புதிய தேர் செய்து வடபாதிமங்கலத்தில் தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் தேர்
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு எப்படி ஒரு சிறப்பு உண்டோ, அதேபோல் வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தேரும் சிறப்பு வாய்ந்ததாகும்.
திருவாரூர் ஆழித்தேரோட்டம் நடைபெற்று முடிந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தேர், பக்தர்களால் வடம்பிடித்து தேரோட்டம் நடைபெறும்.
இந்த தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து 20 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனால் வடபாதிமங்கலம் பகுதி முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளிக்கும். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தேர் திருவிழாவை சிறப்பிப்பார்கள். இப்படி வடபாதிமங்கலத்தையே பிரமிக்க வைத்த அந்த தேர் சுமார் 25 ஆண்டுகளாக அதன் நிலையடியிலேயே சேதமடைந்து அடர்ந்த காடுகளில் இருப்பது போல் பார்ப்பவர் வேதனை கொள்ளும் நிலையில் சிதைந்து கிடக்கிறது. 1997-ல் தேரோட்டத்தில் பவனி வந்த அந்த தேர், திரும்ப நிலையடிக்கு சென்றதுதான் கடைசி முறை. இப்படி 25 ஆண்டுகளாக வடபாதிமங்கலத்தில் தேர் திருவிழா நடைபெறாமல் உள்ளது அப்பகுதி மக்களை பெரிதும் பாதித்தது.
தேரோட்டம் நடத்த வேண்டும்
அருணாச்சலேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்து 17 ஆண்டுகள் ஆகின்றது என்பதையும் நினைத்து அந்த பகுதி மக்கள் மன வேதனை கொள்கின்றனர். இந்த நிலையில், வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில் புதிய தேர் செய்வதற்கு ரூ.52 லட்சம் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதனால், புதிய தேரை விரைவாக செய்து வடபாதிமங்கலத்தில் தேரோட்ட திருவிழாவை சிறப்பாக நடத்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நிதி வழங்கியது மகிழ்ச்சி
இதுகுறித்து வடபாதிமங்கலம் தேவகி கூறுகையில், கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால், வடபாதிமங்கலத்தில் மிக பிரமாண்டமான அருணாச்சலேஸ்வரர் கோவில் இருந்தும், அதன் தேரோட்ட திருவிழா பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருப்பது, ஊரே செழிப்பாக இல்லாதது போல் உள்ளது. நான்கு வீதிகளையும் சுற்றி வந்து பக்தர்களை மகிழ்ச்சி படுத்தும் தேர் பழுதடைந்து பல ஆண்டுகளாக நிலையடியிலேயே சிதிலமடைந்து இருப்பது மிகவும் வேதனையை தருகிறது.
இந்த வேதனையை போக்கும் வகையில் புதிய தேர் செய்வதற்கு தமிழக அரசு நிதி வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால், புதிய தேரை விரைவாக செய்து முடித்து, கோவில் குடமுழுக்கு நடத்தி தேரோட்டம் வெகு சிறப்பாக நடத்த வேண்டும் என்றார்.
துரிதமாக பணிகள்
இதுகுறித்து வடபாதிமங்கலம் பழனி கூறுகையில், வடபாதிமங்கலம் தேர் திருவிழா என்றாலே ஊரே ஒன்று கூடி சந்தோசத்தை சங்கமிக்கும். அப்படிப்பட்ட ஒரு திருவிழா பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது மிகவும் கவலை அளிக்கிறது. சிறிய ஊர்களில் உள்ள கோவில்களில் கூட இது போன்று திருவிழா நின்றது இல்லை. ஆனால், மாவட்டத்திலேயே பெயர் பெற்ற தனியார் சர்க்கரை ஆலை அமைந்த வடபாதிமங்கலத்தில், பிரபலமான கோவில் தேரோட்ட திருவிழா பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளதே என்ற ஆதங்கம் இந்த பகுதி மக்கள் அனைவரது மனதிலும் இருந்து வருகிறது. அதிலும், பழமை வாய்ந்த சிற்பங்களை கொண்ட தேர் சிதிலமடைந்த நிலையில் நிலையடியில் இருப்பதை கண்டு மக்கள் வேதனை கொள்கின்றனர். தற்போது வடபாதிமங்கலம் தேர் புதிதாக செய்வதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது மிகவும் சந்தோசமாக உள்ளது.
அதனால், புதிய தேர் செய்து மக்கள் எதிர்பார்ப்பை போக்கும் வகையில் விரைவில் தேரோட்டம் வலம் வர துரிதமாக பணிகள் நடைபெற வேண்டும் என்றார்.