தரைப்பாலத்தில் புதிய தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?
முத்துப்பேட்டை அருகே எடையூர் சங்ககேந்தி கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடிவிபத்துகள் ஏற்படுவதால் தரைப்பாலத்தில் புதிய தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தில்லைவிளாகம்:
முத்துப்பேட்டை அருகே எடையூர் சங்ககேந்தி கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடிவிபத்துகள் ஏற்படுவதால் தரைப்பாலத்தில் புதிய தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
முத்துப்பேட்டை அருகே எடையூர் சங்கேந்தி கிழக்கு கடற்கரை சாலை வளைவில் தரைப்பாலம் உள்ளது. இந்தபாலத்தின் தடுப்புச்சுவரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாகனம் மோதியது. இதில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டது.இதை தொடர்ந்து புதிதாக தடுப்புச்சுவர் கட்டாமல் பெயரளவிற்கு ெசங்கற்களை அடுக்கி வைத்திருந்தனர். இதுவும் இடிந்து விழுந்து விட்டது. இதனால் இந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது தடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்து காயம் அடைகின்றனர்.
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
இரவில் மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாய்க்காலுக்குள் விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதுபோன்று விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்காலிமாக அமைக்கப்படுகிறது
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எடையூர் சங்கேந்தி கிழக்கு கடற்கரை சாலை வளைவில் உள்ள தரைப்பாலத்தின் தடுப்புச்சுவர் நீண்ட காலமாக சேதமடைந்துள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது.
விபத்து நடைபெறும் போது மட்டும் நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிகமாக தடுப்புச்சுவர் அமைத்தார்கள். போதிய தரம் இல்லாததால் அந்த தடுப்புச்சுவரும் இடிந்து விழுந்து விட்டது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சேதமடைந்த தடுப்புச்சுவரை பார்வையிட்டு தரமான தடுப்புச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றர்.
மதிப்பீடு செய்து அனுப்பபட்டுள்ளது
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கூறுகையில் புதிய தடுப்புச்சுவர் அமைக்க மதிப்பீடு செய்து உயர்அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் விரைவில் தடுப்புச்சுவர் அமைக்கப்படும் என்றனர்.