பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
கள்ளிப்பட்டி பிரிவில் இடித்து அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடை புதிதாக அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
நெகமம்,
கள்ளிப்பட்டி பிரிவில் இடித்து அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடை புதிதாக அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பயணிகள் நிழற்குடை
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டி ஊராட்சியில் பொள்ளாச்சி-திருப்பூர் மெயின் ரோட்டில் கள்ளிப்பட்டி பிரிவு உள்ளது. இங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. கள்ளிப்பட்டி சுற்று வட்டார பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர்.
இதன் மூலம் மழை மற்றும் வெயில் காலங்களில் நிழற்குடையில் பஸ்சுக்காக காத்திருந்து பயணித்தனர். இந்தநிலையில் பொள்ளாச்சி-திருப்பூர் மெயின் ரோட்டில் புளியம்பட்டியில் இருந்து சின்னேரிபாளையம் வரை சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பணியின் போது பயணிகள் நிழற்குடை சாலை அருகே இருந்ததால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை காணப்பட்டது.
இடித்து அகற்றம்
இதையடுத்து பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலக கூட்டத்தில் கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த இடத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது. இந்தநிலையில் பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டு, சில மாதங்களை கடந்தும் இதுவரை புதியதாக நிழற்குடை கட்டப்பட வில்லை. அகற்றப்பட்ட இடத்தில் இருந்து சற்று தூரத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கள்ளிப்பட்டி பிரிவில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்து வருகிறார்கள். தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால், நிழலுக்கு ஒதுங்கி நிற்க கூட நிழற்குடை இல்லை. மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி கள்ளிப்பட்டி பிரிவில் பயணிகள் நிழற்குடையை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.