கரூர் பஸ்நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த தனி பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா?


கரூர் பஸ்நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த தனி பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா?
x

கரூர் பஸ்நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த தனி பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

இருசக்கர வாகனங்களின் ஆதிக்கம்

கரூர் பஸ்நிலையம் மிகக்குறைந்த பரப்பளவில் நீண்ட வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த பஸ்நிலையத்தின் உள்ளே பஸ்களை தவிர ஏராளமான இருசக்கர வாகனங்களும் தினந்தோறும் படையெடுத்து வருகின்றன. இதற்கிடையே கரூர் பஸ்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இங்கு வரும் பஸ்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருசக்கர வாகனங்களின் ஆதிக்கம் தினந்தோறும் பெருகிக்கொண்டே இருக்கின்றது. வெளியூர் செல்லும் சில பயணிகள் இருசக்கர வாகனங்களின் மூலம் பஸ்நிலையத்திற்குள் வந்து இறங்குகின்றனர். இதனால் அங்கு வந்து செல்லும் பஸ் வெகுநேரம் காத்து நிற்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் வேகமாக வரும் இருசக்கர வான ஓட்டிகளால் வாகனஙகள் மோதி விபத்துகளும் ஏற்படுகின்றன.

சிக்கி திணறல்

கரூர் பஸ்நிலையத்தில் பொதுமக்கள், பேருந்துகள் வந்து செல்லும் விவரங்களை எளிதாக தெரிந்துகொள்வதற்காக பேருந்து கால அட்டவணைகள் விசாரணை அலுவலகம் ( சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும் இடம்) அருகே அமைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே வாகன ஓட்டிகள் சிலர் தாறு மாறாக தங்களது இருசக்கர வாகனங்களை தினந்தோறும் நிறுத்தி வைத்து செல்கின்றனர். இது பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் பஸ்நிலையத்திற்குள் நடந்து செல்ல முடியவில்லை. இதில் பலர் முதியவர்களுடனும், குழந்தைகளுடனும் வருகின்றனர். அவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. மேலும் விசாரணை அலுவலகம் ( சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும் இடம்) பஸ்நிலையத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. மேற்படி பஸ்நிலையத்திற்குள் பஸ்களும் தினந்தோறும் சிக்கித் திணறித்தான் வரவேண்டி உள்ளது.

இதன் மூலம் சில சமயங்களில் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. அதே சமயத்தில் சில பேருந்துகளின் டிரைவர்கள் மிக நீண்ட நேரம் ஒலிப்பான்களை இயக்குகிறார்கள். இதுவும் வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையூறாக அமைகின்றன. இதனால் பஸ்நிலையத்திற்கு வெளியே மெயின் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு தேவையற்ற பிரச்சினைகளும், குழப்பங்களும் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களை அனுமதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தனி இடத்தில் பார்க்கிங் வசதி வேண்டும்

கரூர் மாநகரில் ஜவுளி உற்பத்தித்தொழில் அதிகமாக நடைபெறுவதால் வெளி மாவட்டங்களில் இருந்து கரூர் பஸ்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. மேலும் இதற்கேற்ப, பஸ்நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களின் ஆக்கிரமிப்பும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் வரமுடியாதபடி இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும் இதுசம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகள் மேற்படி இடத்தை ஆய்வு செய்து இருசக்கர வாகனங்களுக்கென்று தனி பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். அப்போதுதான் கரூர் பஸ்நிலையத்திற்குள் பொதுமக்களும், பயணிகளும் எந்தவித சிரமும் இன்றி சென்று வரமுடியும். இவ்வாறு தனி பார்க்கிங் வசதி செய்து கொடுத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. இதன்மூலம் மாநகராட்சிக்கு அதிகளவில் வருமானமும் கிடைக்கும். எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக கரூர் மாநகராட்சி நிர்வாகம் இருசக்கர வாகனங்களுக்கென்று தனி பார்க்கிங் வசதி செய்து தருவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!


Next Story