தமிழக பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்குமா?


தமிழக பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்குமா?
x
தினத்தந்தி 17 March 2023 6:45 PM GMT (Updated: 17 March 2023 6:46 PM GMT)

வருகிற 20-ந் தேதி தாக்கல் ஆகிறது தமிழக பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்குமா?

கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு அரசின் 2023-24-ம் ஆண்டுக்கான பொது 'பட்ஜெட்'டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்கிறார். இதில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் தாங்கள் விரும்பும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்குமா? என்று ஆவலோடு காத்து இருக்கிறார்கள். அதுபற்றிய கருத்துகள் வருமாறு:-

மக்கள் எதிர்பார்ப்பு

விழுப்புரத்தை சேர்ந்த உமாபதி:-

மின் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தாலே இந்த பட்ஜெட் மகிழ்ச்சிகரமான பட்ஜெட்டாக இருக்கும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் இருக்கிறது. ஒன்றிய உள்நாட்டு உற்பத்தியில் 2-வது மாநிலமான தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறு, குறு தொழில்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முடங்கிய தொழில்களை மீட்டு கொண்டு வர தாட்கோ வங்கிகள் மூலம் எளிய முறையில் கடன் வழங்குவதற்கான நடவடிக்கை அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கிறோம். 1993-ம் ஆண்டு முதல் தனி மாவட்டமாக இருந்து வரும் விழுப்புரத்தில் 30 ஆண்டுகள் ஆன பின்னும் இதுவரை தொழிற்பேட்டை இல்லாமல் இருக்கிறது. இதற்கு இந்த பட்ஜெட்டில் விடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் கோவைக்கு அடுத்தபடியாக அதிக நகை தொழில் உற்பத்தி செய்யும் நகரமான விழுப்புரத்தில் நகை தொழிலுக்கான சிறப்பு தொழிற்பேட்டை வேண்டும் என்ற கோரிக்கை 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பெருமளவில் விவசாயம் செய்யப்படும் கரும்புக்கு அடுத்தபடியாக மரக்காணம் சுற்றுப்பகுதிகளில் தரமான தர்பூசணி விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக திட்டங்களும், மயிலம் தொகுதியில் அதிகப்படியான சவுக்கு விளைவதால் அங்கே காகித கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை போன்ற அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றால் மகிழ்ச்சி அடைவோம்.

சித்த மருத்துவம் குறித்து பாடத்திட்டம்

திண்டிவனம் வக்கீல் தங்கசுரேஷ்:-

தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் புதுப்புது யுக்திகளை கையாண்டு முதல்-அமைச்சர், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்வி, மருத்துவம், வேளாண்துறைக்கு இலவச திட்டங்களை செயல்படுத்தினாலும் முக்கியத்துவம் கொடுத்து மேலும் பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச திட்டங்களை மேம்படுத்த வேண்டும். கல்வித்துறையில் பல புதிய யுத்திகளை கையாளுகிறார்கள். இது தொடர வேண்டும். தமிழகத்தில் பாரம்பரியமான சித்த மருத்துவம் குறித்து பாடத்திட்டமாக கொண்டு வர வேண்டும். அனைவரும் சட்டத்தை தெரிந்து கொள்ளும் வகையிலும் மாணவர்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். வேளாண்துறை மூலமாக விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையிலும் நமது பாரம்பரியமான உணவு வகைகளை கைவிடாமல் இயற்கை விவசாயத்தை தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். கல்வி, மருத்துவம், வேளாண்மை இவற்றுக்கு தற்போதைய பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுத்தாலே மக்களிடம் நன்மதிப்பை பெற முடியும்.

பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிலையம்

மேல்மலையனூர் அருகே கஞ்சமலை புரவடையை சேர்ந்த சேகர்:-

2023-2024-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் எங்கள் மேல்மலையனூர் பகுதியில் சில திட்டங்களுக்கான அறிவிப்பை எதிர்பார்க்கிறோம். முதலாவதாக எங்கள் பகுதி விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் விவசாயம் இல்லாத காலங்களில் இப்பகுதி மக்கள் கஷ்டப்படுகின்றனர். ஆகையால் அந்த நேரத்தில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேல்மலையனூர் பகுதியில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை அமைக்க வேண்டும். அதேபோல் இப்பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் வழங்கும் வேலையை முறைப்படுத்தி விவசாயம் செழிக்க உதவ வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டம்

செஞ்சி அருகே அன்னமங்கலத்தை சேர்ந்த முனுசாமி:-

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கீழ்கண்ட நலத்திட்டங்களை தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக அறிவிக்க கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டையை சுற்றுலாத்தலமாக அறிவித்து ராஜகிரி, கிருஷ்ணகிரி கோட்டையை இணைத்து சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் ரோப் கார் வசதி செய்துத்தர வேண்டும். நீர் ஆதாரம் மற்றும் நீர் பாசனம் பாதுகாப்பு வரையறை செய்யப்பட்டு விவசாயம் சிறப்புற திட்டமிடல் வேண்டும். அனைத்து கிராமங்களிலும் நூலக வசதி செய்து தர வேண்டும். தாய்மொழி வளர்ச்சிக்கு இலக்கணம் அவசியம். எனவே 6 முதல் 12 வகுப்புகள் வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாட நூலுடன் தனி இலக்கண புத்தகம் வழங்கப்பட வேண்டும். இதேபோல் ஆங்கில பாடத்திற்கும் தனி கிராமர் புத்தகம் வழங்கப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகள், சுகாதார விழிப்புணர்வு, தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்பு குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சமூக நீதியை பாதுகாக்க இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடுகள் வழங்க வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு ஏற்படும்பட்சத்தில் மக்களுக்கு மானியம் வழங்கி அரசு விலை உயர்வை ஈடுசெய்ய வேண்டும்.

மகிழ்ச்சியான பட்ஜெட்டாக இருக்கும்

தியாகதுருகம் அருகே திம்மலை ஊராட்சி ராஜேந்திரன்:-

தமிழக சட்டப்பேரவையில் வருகிற 20-ந் தேதி பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. தமிழக முதல்-அமைச்சர் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் 85 சதவீத வாக்குறுதிகளை ஏற்கனவே நிறைவேற்றி இருப்பதாக கூறியுள்ளார். இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றார். எனவே நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டம் தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப தலைவிகளிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்வாறு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 அறிவிக்கும் சமயத்தில் இந்த பட்ஜெட் அனைவருக்கும் மகிழ்ச்சியான பட்ஜெட்டாக அமையும். இந்தியாவில் 2-வது மிகப்பெரிய வருவாய் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உலக அளவில் தமிழ் நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்காக ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் தொழில் வளர்ச்சிக்கான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி:- நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தில் 60 வயது முடிவடைந்த சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாட்டில் இயங்காத தனியார் சர்க்கரை ஆலைகளை பொதுத்துறை ஆலைகளாக மாற்றி அரசே நடத்த வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும், நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் வழங்க வேண்டும். நீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் மற்றும் நீர் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும். உர மானியம் வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப...

கள்ளக்குறிச்சி அருண்கென்னடி:-

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து அறிவிக்க வேண்டும். மகளிருக்கு சமையல் கியாஸ் மானியமாக ரூ.400 வழங்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது. அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழை, வெயில் காலங்களில் நெல் மூட்டைகள் சேதம் அடைவதை தடுக்க மேற்கூரைகள் அமைத்து தர வேண்டும். நிலுவையில் உள்ள மகப்பேறு நிதி உதவித்தொகையை வழங்குவதற்கு அரசாணை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story