தமிழக பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்குமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தமிழக பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்குமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

தமிழக பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

தமிழ்நாடு அரசின் 2023-24-ம் ஆண்டுக்கான பொது 'பட்ஜெட்'டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்கிறார். இதில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் கரூரை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் விரும்பும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்குமா? என்று ஆவலோடு காத்து இருக்கிறார்கள். அதுபற்றிய கருத்துகள் வருமாறு:-

காலி பணியிடங்களை நிரப்பலாம்

வெள்ளியணை அருகே உள்ள முஷ்டகிணத்துப்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் ரஞ்சித்குமார்:-

தமிழக அரசு அறிவிக்க உள்ள பட்ஜெட்டில், அரசு பள்ளிகளில் குறைவான ஊதியத்தில் அதிக அளவில் பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், ஆசிரியர்கள் உயர்கல்வி கற்றாள் அவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும், மத்திய அரசுக்கு இணையான அகப் விலைப்படி வழங்கப்படும், புதிய பென்ஷன் திட்டம் ஒழிக்கப்பட்டு பழைய பென்ஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கிடையே உள்ள ஊதிய முரண்பாடுகள் களையப்படும், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை காலத்தின் போது இடம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டால் நான் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் வரவேற்று அரசுக்கு நன்றி கூறுவார்கள்.

வாழ்வாதாரம் உயா்கிறது

புகழூைர ேசா்ந்த கதிர்வேல்:-

தமிழக அரசு விவசாயிகளுக்கான பட்ஜெட்டில் கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ.4,500 வரை உயர்த்த வேண்டும். அதேபோல் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையையும் உயர்த்த வேண்டும். மேலும் இடு பொருட்களான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மானியம் வழங்க வேண்டும். விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்ய வேண்டுமென்றால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேளாண் பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்க வேண்டும். இன்று வரை விவசாயிகள் விளைவிக்கும் விளைவு பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வருகிறது. ஆனால் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலை தொடர்ந்து கரைந்து வருகிறது. இதை மாநில அரசு தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும்.உழவன் விவசாயம் செய்ய வில்லை எனில் ஒருவரும் உயிருடன் இருக்க இயலாது. அதை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்க வேண்டும்.

விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும்

புங்கோடை பகுதியை சேர்ந்த இல்லத்தரசி ராசம்மாள்:-

தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் ஏழை, எளிய உணவு பொருட்களை தேவையான அளவு வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பெரிய விற்பனையாளர்கள் குடோன்களில் பொருட்களை பதுக்கி வைத்துக் கொண்டு இயற்கையான ஒரு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தினசரி கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் சாப்பாட்டுக்கு தேவையான பொருட்களை அவர்கள் போதிய அளவு வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரையும், குறையுமாக சாப்பிட்டு காலம் தாழ்த்தி வருகின்றனர். நிம்மதியான சாப்பாடு சாப்பிட முடியவில்லை. விலைவாசி உயர்வு விண்ணை தொடும் அளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்சஜெட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கூடியதாக இருக்க வேண்டும்.அதற்கான சட்டத்தை இயற்றி பதுக்கல் கார்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பதுக்கிய பொருட்களை பறிமுதல் செய்தாலே விலைவாசி குறையும்.எனவே அதற்கான சட்ட, திட்டங்களை சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.

போதுமான வருமான வரும் பட்ஜெட்

வெள்ளியணை அருகே உள்ள குளத்தூரை சேர்ந்த பெரியசாமி:- சிறு-குறு விவசாயிகள் பயன்படக்கூடிய அறிவிப்புகளை அதிகமாக வெளியிட வேண்டும் என்பது என்னை போன்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது சிறு-குறு விவசாயிகள் சிறிதளவு நிலத்தில் செய்யும் தோட்ட விவசாயத்திற்கு ஆழ் துளைக்கிணறுகளையே பயன்படுத்துகின்றனர். இந்த ஆழ்துளை கிணறுகளை பெரும்பாலான விவசாயிகள் கடன் வாங்கித்தான் அமைக்கின்றனர்.அந்த ஆள்துளை கிணறுகளை பயன்படுத்தி செய்யும் விவசாயத்தால் கடனை அடைக்க கூடிய அளவுக்கு வருமானம் கிடைக்காததால் பல ஆண்டுகளுக்கு கடனாளியாகவே இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு இந்த பட்ஜெட்டில் மானியம் வழங்கப்படும் என அறிவித்தால் பயனுள்ளதாக இருக்கும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த கிராமப்புறங்களில் உள்ள ஏரி குளங்களை தூர்வாரி அந்தப் பகுதியில் ஓடும் ஆறுகளின் நீரை குழாய் மூலம் கொண்டு சென்று நிரப்பப்படும் என அறிவித்து அதற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்தினால் விவசாயமும் குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்படும்.

விவசாயத்தால் போதுமான வருமானம் கிடைக்காமல் அவதிப்படும் விவசாயிகள் தங்கள் நிலங்களை வீட்டு மனைகளுக்கு விற்று வருகின்றனர். அதை தடுத்து நிறுத்தி விவசாயிகளுக்கு விவசாயத்தின் மூலம் போதுமான வருமானம் கிடைக்கும் வகையில் உத்திரவாதம் வழங்கும் அறிவிப்புகள் வந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மொத்தத்தில் தமிழக அரசின் பட்ஜெட் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதே மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும்

கரூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன்:- தமிழக அரசின் பட்ஜெட்டை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நமது அத்தியாவசிய நெல் விளைவிக்கும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து அரசாங்கத்தால் இருப்பு வைக்க கூடிய அளவிற்கு போதுமான குடோன்கள் தமிழகத்தில் இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் நெல்களை இருப்பு வைக்கக்கூடிய மிகப்பெரிய அளவிலான குடோன்களை கட்ட வேண்டும். வணிகர்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. டெஸ்ட் பர்சேஸ் முற்றிலும் நீக்க வேண்டும்.

தற்போது அரசு நிர்ணயித்த தொகையை விட ஜி.எஸ்.டி. அதிக அளவில் வசூல் ஆகிவிட்டது. எனவே அரிசி மற்றும் சிறு வியாபாரிகளுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நவீன எந்திரங்கள் வாங்க தமிழக அரசு மானியம் கொடுக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு வழங்கலாம்

கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம்:-

பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகள் பற்றி அதிக அளவு அறிவிப்புகள் தேவை. டி.என்.பி.எஸ்.சி. பொதுத்தேர்வு அறிவிப்புகள் முறையாக வெளியிட்டு குறுகிய காலத்திற்குள் தேர்வு முடிவுகளை அறிவித்து பணி ஆணை வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் இலவசமாக கொடுக்கலாம். வேறு இலவசங்கள் எதுவும் தேவையில்லை. 100 சதவீதம் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். தொழிற்கல்வி சம்பந்தமான படிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்கு மாற்றாக வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்துக் கொடுத்து அந்தப் பகுதியில் உள்ள மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story