வாழை இலையை வாங்க வருவாங்களா...?
வாழை இலையை வாங்க வருவாங்களா...?
தொண்டாமுத்தூர்
தொண்டாமுத்தூர் பகுதியில் விலை வீழ்ச்சியால் தோட்டங்களில் வாைழ இலைகள் கட்டுகளாக தேக்கம் அடைந்துள்ளன. இதனால் வாழை இலையை வாங்க வருவாங்களா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளன.
வாழை சாகுபடி
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளான நரசிபுரம், ஆலாந்துறை, இக்கரை போளுவாம்பட்டி, செம்மேடு, மத்வராயபுரம், தேவராயபுரம், இருட்டுப்பள்ளம், சாடிவயல் உள்பட பல இடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதில் 30 சதவீதம் இலை வாழை என்று அழைக்கப்படும் இலைக்காக வளர்க்கப்படும் வாழைகள் ஆகும். இந்த வாழையில் 3 நாட்களுக்கு ஒருமுறை இலையை வெட்டி எடுக்கலாம். ஆனால் விலைகுறைந்ததாக கூறி வியாபாரிகள் யாரும் வாழை இலையை வாங்க வருவது இல்லை என்று கூறப்படுகிறது. ஆகவே விலை வீழ்ச்சியால் வாங்க வராமல் தோட்டங்களில் கட்டு, கட்டாக வாைழ இலைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் எப்போது வியாபாரிகள் வாங்க வருவார்கள் என்று விவசாயிகள் ஏக்கத்திலும், கவலையிலும், எதிர்பார்ப்பிலும் உள்ளனர். இது குறித்து வாழை சாகுபடி செய்து உள்ள விவசாயிகள் கூறியதாவது:-
ஒரு கட்டு ரூ.550
ஒரு ஏக்கரில் இலை வாழையை சாகுபடி செய்து அறுவடை வரை ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். சாகுபடி செய்ததில் இருந்து 6 மாதங்கள் கழித்து இலையை வெட்டலாம். 3 நாட்களுக்கு ஒருமுறை வெட்ட முடியும். இப்படி தொடர்ந்து 1½ ஆண்டுகள் இலையை வெட்ட முடியும்.
ஒரு இலை 3 அடி உயரம் முதல் 7 அடி உயரம் வரை இருக்கும். வாழை சாகுபடி செய்ததும் வியாபாரிகள் மொத்தமாக இலையை வெட்ட ஆர்டர் எடுத்துவிடுகிறார்கள். அவர்கள் இலையை வெட்டிவிட்டு 100 இலைகள் கொண்ட ஒரு கட்டுக்கு ரூ.550 கொடுக்கிறார்கள்.
வாங்க வருவது இல்லை
இந்த நிலையில் தற்போது வாழை இலையின் விலை வீழ்ச்சி அடைந்துவிட்டது. இதனால் தற்போது எங்களால் வந்து வாங்க முடியாது என்று கூறுகிறார்கள். வியாபாரிகள் வந்து இலையை வாங்கிவிட்டு செல்வார்கள் என்று நினைத்து விவசாயிகள் வெட்டி வைத்த இலை கட்டு அப்படியே தோட்டங்களில் வீணாக கிடக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
வருடத்தில் சித்திரை, ஆடி, புரட்டாசி, பங்குனி ஆகிய 4 மாதங்கள் மட்டும்தான் விசேஷ நாட்கள் இருக்காது. மற்ற அனைத்து மாதங்களிலும் விசேஷங்கள் இருக்கும். தற்போது சித்திரை மாதம் முடிந்து வைகாசி மாதம் பிறந்துவிட்டதால், விஷேச நிகழ்ச்சிகள் பல நடந்து வருகிறது. எனவே இந்த விஷயத்தில் அதிகாரிகள் தலையிட்டு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விவசாயிகளிடம் இருந்து வாழை இலைகளை வாங்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.